Tamilnadu
“முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் தொடக்கம்! : பயனாளிகளின் இல்லத்திற்கே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் இத்திட்டத்திற்கு அரசுக்கு 35.92 கோடி ரூபாய் செலவாகும். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்று நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார்.
அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்களை வழங்குவதால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்றும், குடும்பத்தில் ஒருவராக தங்களது சிரமங்களை அறிந்து இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" சென்னையில் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Also Read
-
B.Ed மாணாக்கர் சேர்க்கை ஆணை... எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? - அமைச்சர் கோவி.செழியன் கூறியது என்ன?
-
தாயுமானவர் திட்டம் : வயது முதிர்ந்தவர் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!
-
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மடிக்கணினி... Dell, Acer ஆகிய நிறுவனங்கள் தேர்வு - முழு விவரம் உள்ளே !
-
பீகாரில் 124 வயதில் வாக்காளரா? : தேர்தல் ஆணையத்தை கண்டித்த இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!