Tamilnadu
பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலை! - நினைவு அரங்கம்! : முழு விவரம்!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இன்று (11.8.2025) நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 15.வேலம்பாளையத்தில் 48 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை, திருமுருகன்பூண்டி நகராட்சியில் 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருப்பூர் மினி டைடல் பூங்கா உள்ளிட்ட 949 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 182 கோடியே 06 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 295 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.8.2025) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியிலுள்ள நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு “சி. சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்பட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார்.
மேலும், அவ்வளாகத்தில் 4 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “வி.கே. பழனிசாமி அரங்கம்” மற்றும் “பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம்” ஆகியவற்றையும், ஆழியாறு அணையின் பூங்காவில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் இத்திட்டம் இருந்து வருகிறது. மேலும், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவின் பாசன வசதிக்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் இந்தத் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் பின் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி வறண்டும் போதிய மழையின்றியும் அமைந்திருந்தது. மேற்கு நோக்கி செல்லும் சில ஆறுகளை திருப்பி இப்பகுதி மக்களின் வாழ்வை மலரச் செய்ய அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அரசு உறுதி பூண்டு, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆறுகளின் நீரை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
தமிழ்நாடு - கேரள கூட்டுறவின் அடையாளமாக இந்தத் திட்டம் 1962-ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் எட்டு ஆறுகள் இணைக்கப்படுகின்றன. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு ஆகிய ஆறுகள் ஆனைமலைக் குன்றுகளிலும், ஆழியாறு மற்றும் பாலாறு ஆகியவை சமவெளியிலும் அமைந்துள்ளன.
இந்நதிகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு ஒன்றில் தேங்கும் நீரை மற்றொன்றுக்கு சுரங்கங்கள் வாயிலாக இணைத்து, கோவை மாவட்டத்தின் சமவெளிப்பகுதியிலும் கேரள மாநிலத்தில், சித்தூர் பகுதியிலும் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தற்போது சுமார் 3 இலட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. வி.கே. பழனிசாமி கவுண்டர் அவர்கள் 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய முதல் சட்டமன்ற உரையில் பொள்ளாச்சி பகுதியில் நிலவிய கடும் வறட்சியும், ஆனைமலை குன்றுகளின் மற்றொரு பகுதியில் பயனில்லாமல் கடலுக்கு சென்ற பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே அணைகட்டி அந்நீரையினை திருப்பிவிட்டால் இப்பகுதி செழிப்படையும் என்று எடுத்துரைத்து பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது பெரும் முயற்சியால் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய பொறியாளர் ஆனந்த்ராவ் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து ஆய்வு செய்து, அணை கட்டுவது சாத்தியம் என்ற அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தின் உயிர்நாடியான பரம்பிக்குளம் அணை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
இத்திட்டம் தொடங்கிட அப்போதைய நிதி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை செயல்படுத்திட உழைத்த பெருந்தலைவர் காமராசர், சி. சுப்பிரமணியம், வி.கே. பழனிசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம், “வி.கே. பழனிசாமி அரங்கம்” மற்றும் “பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம்” திறந்து வைத்தல்
2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான வி.கே.பழனிசாமி கவுண்டர் அவர்களுக்கு ஆழியாறு அணையின் பூங்காவில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவுச்சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும். மேலும், பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு ஒன்றிய அரசின் மறைந்த முன்னாள் அமைச்சர் “சி.சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்படும்.
இவ்வளாகத்தில், விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு கட்டமைக்கப்படும். இவ்வரங்கத்திற்கு “வி.கே.பழனிசாமி அரங்கம்” எனப் பெயர்சூட்டப்படும். மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு “பொள்ளாச்சி நா.மகாலிங்கம்” அவர்களின் பெயர் சூட்டப்படும்.
இம்மண்டபத்தில் பரம்பிக்குளம் ஆழியாறுத் திட்டப்பணிகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும். மேலும், இவ்வளாகத்தில் பெருந்தலைவர் காமராசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், ஆகியோரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், அவர்களது முழுத்திருவுருவச் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிலுள்ள நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு “சி. சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்பட்டு, அவ்வளாகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார்.
மேலும், இவ்வளாகத்தில் விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திடும் வகையில் 4 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு தளங்கள் கொண்ட “வி.கே. பழனிசாமி அரங்கம்” மற்றும் “பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம்” ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆழியாறு அணையின் பூங்காவில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், இன்றைய இளையதலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் குறித்து அறிந்திடும் வகையிலும் வி.கே. பழனிசாமி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
Also Read
-
"மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?" - திமுக MP தயாநிதி மாறன் கேள்வி !
-
"மனித குலத்திற்கே எதிரான தீட்டை அரசு அனுமதிக்காது" - திருப்பரங்குன்றம் மலை வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்!
-
“தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!” : அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனு!
-
M.Ed மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்... அமைச்சர் அறிவிப்பு - முழு விவரம் உள்ளே !
-
திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் : முக்கிய அறிவிப்பு இதோ!