Tamilnadu
நடராஜர் கோவில்: கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி !
சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த மார்ச் முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த குழுவினர், வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா? அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா ? என புகைப்பட ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !