Tamilnadu

பொதுப்பணித்துறையின் சாதனைகள்... வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என புகழப்படும்!

 தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும்-வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக்குரிய துறையாகும். 

       தமிழ்நாடு அரசின் இன்றைய தலைமைச் செயலகக் கட்டடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் ஆகும். பல்கிப் பெருகியுள்ள அரசின் நிர்வாகத் துறைகள் அனைத்திற்கும் இடம் தேவைப்பட்டதால் 1974 இல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகை என்னும் பிரம்மாண்டமான 10 மாடி கட்டடத்தைக் கட்டினார்கள். 

       அந்தக் கட்டடமும் இடப்பற்றாக்குறையை நிரப்ப முடியாது என்ற நிலையில், தேவையின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் புதிய தலைமைச் செயலகம்- சட்டமன்றக் கட்டடத்தை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கட்டி முடித்து 2010 ஜனவரி திங்களில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை அழைத்து சோனியா காந்தி அம்மையார் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். இன்று அந்தக் கட்டடம் ஓமந்தூரார் உயர் சிறப்பு  மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கட்டமைப்புகளாக உருவாக்கிய கலைச் சின்னங்களில் இன்றும் எழிலோடு சென்னை மாநகரின் தனித்தன்மையையும் தமிழ்ச் செம்மொழி மாண்பையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது வள்ளுவர் கோட்டம். !

       திராவிட நாயகர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வள்ளுவர் கோட்டத்தை மேலும் எழில் குலுங்கிடும் வண்ணம் ரூ. 80 கோடியில் புதுப்பித்துக் கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். திருவாரூர் தேர் வடிவிலான ஒற்றைக் கல் தேர் இரவில் லேசர் கதிர் வீச்சுகளில் வண்ணமயமாக மின்னொளியில் மிளிர்வது காண்போரின் கண்களையும், கருத்தையும் ஈர்த்து இன்பம் அளிக்கிறது.  

ரூ. 240.53 கோடியில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை  

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கால மாட்சிமையை மேதினிக்கு முழங்கும் வகையில் நான்கு ஆண்டுகளில் மேலும் பல புதிய கட்டமைப்புகளைப்  படைத்துள்ளார்கள். 

2015 இல் அறிவிப்பு வெளியிட்டு, 2019 நாடாளுமன்றத்  தேர்தலுக்குமுன் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 10 ஆண்டு காலமாகியும் இதுநாள்வரை கட்டப்படாமல் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. ஆனால், 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,  ஓர் ஆண்டு காலத்தில் சென்னை கிண்டியில் ரூ. 240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை 6 தளங்களுடன் கட்டி 15.6.2023 அன்று திறந்து வைத்தார்கள். இன்று அந்த மருத்துவமனை தோற்றப் பொலிவுடன்  மிகக் குறுகிய காலத்தில் இலட்சக்கணக்கான  பொதுமக்களுக்கு உயர்தரமான சிகிச்சைகளை வழங்கிப்  புகழ் பெருக்கி வருகிறது. 

கொளத்தூரில் அரசு பெரியார் மருத்துவமனை 

கொளத்தூர் தொகுதியில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்படும் என முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2023 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் 3 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்படுவதற்கு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் இந்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படத் திட்டமிட்டு 2024 மார்ச் திங்கள் 7 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. 

மொத்தம் 210 கோடியே 80 இலட்சம் ருபாய் செலவில்  6 அடுக்குத் தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்கம்- நவீன ரத்த வங்கி- புற்று நோயியல் பிரிவு- குழந்தைகள் நலப்பிரிவு- நரம்பியல்  பிரிவு- மகப்பேறு பிரிவு என்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து வசதிகளோடும் மிகப்  பிரம்மாண்டமாக உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.2.2025 அன்று இந்த கொளத்தூர் பெரியார் மருத்துவமனையைத் திறந்து வைத்தார்கள். உரையாற்றும் போது,  ‘’ இந்த மருத்துவமனைக்குப் பெயர் வைப்பது சம்பந்தமாக நம்முடைய திரு. சேகர்பாபு அவர்கள் என்னிடம் வந்து கேட்டார். அப்போது ‘’பெரியார் நகரில் இருக்கும் இந்தப் பெரிய மருத்துவமனைக்குப் பெரியார் பெயரையே வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன் ! ஏன் என்றால், அவர்தான் நம்முடைய சமூகத்தில் நிலவிய சமூகப் பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூக மருத்துவர்’’. அதனால் இந்த மருத்துவமனைக்குப் பெரியார் பெயரைச் சூட்டியதில் பெரியாரின் தொண்டனாக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.   

மதுரை இராஜாஜி மருத்துவமனை கட்டடம் 

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மிகவும் பழைமையானது. தென் மாவட்ட மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளைப் பெறுவதற்குப் பேருதவிகளைப் புரிந்து வருகிறது. அம்மருத்துவமனைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ரூ. 187.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அந்நிதி மூலம் கட்டப்பட்ட மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.2.2024 அன்று திறந்து வைத்தார்கள்.  

ரூ. 4179 கோடியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் 

அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, இராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், ஆகிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டடங்கள் ரூ. 4179 கோடியில் கட்டப்பட்டுள்ளன. அவை  11.1.2022 அன்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பிரதமர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டன.  இவை தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளுக்கு மேலும் பெருமைகள் சேர்க்கின்றன.  

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் ரூ. 218 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள் 

அரசின் அனைத்து  திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். அவர்களுக்கான அலுவலகக் கட்டடங்கள் மக்கள் அனைவரும் வந்து தங்கள் கோரிக்கைகளைத் தந்து நிறைவேற்றிச் செல்வதற்கு வசதியாக  கம்பீரத் தோற்றத்துடன் அமைந்திட வேண்டும் என புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறப்பான வடிவமைப்புடன் கட்டினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நான்கு புதிய மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களைக் கட்டியுள்ளார்கள். 

அவற்றுள், 29.6.2022 அன்று ரூ. 109.71 கோடியில் கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், 30.6.2022 அன்று ரூ. 118.40 கோடியில் கட்டப்பட்ட இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், 4.3.2024 அன்று ரூ. 114.48 கோடியில் கட்டப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், 10.11.2024 அன்று ரூ. 70.57 கோடியில் கட்டப்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கட்டடம் ஆகிய 4 மாவட்ட அலுவலகக் கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

கீழடி அருங்காட்சியகக் கட்டடம்  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அகழாய்வில் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நகர நாகரீக வாழ்வின் சின்னங்களாக  கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களைக் காட்சிப்படுத்திட தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் பறைசாற்றும் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய புதிய அகழ்வைப்பக  அருங்காட்சியகக்  கட்டடம் ரூ. 18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் 5.3.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் சுற்றுலா மையமாக உருப்பெற்று நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுப் பாராட்டி வருகிறார்கள். 

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்  

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவாக ரூ. 218.84 கோடி செலவில் மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, மதுரை புதுநத்தம் சாலையில் 2022 பிப்ரவரி திங்களில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 6 தளங்களுடன் 2.13 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ஏறத்தாழ 5 இலட்சம் நூல்கள் இடம் பெறக்கூடிய வகையில் பிரம்மாண்டமான நூலகம் உலகத்தரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை  முதலமைச்சர் அவர்கள் 15.7.2023 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளன்று திறந்து வைத்தார்கள். 

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் 

தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையைப் பாடும்- தமிழரின் வீர விளையாட்டுக் கலைகளில் ஒன்று சல்லிக்கட்டு விழா! சங்க இலக்கியங்களில்  முல்லைப் பாட்டு இலக்கியம் ஏறுதழுவும் இளைஞர்களின் வீரத்தைக் கூறுவதாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாடு பிடித்தல், எருது  விடுதல், காளை அடக்குதல், சல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு எனப் பல்வேறு பெயர்களில் சல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் சல்லிக்கட்டு விழா உலகப் புகழ் பெற்றதாகும். அது, வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கும் பெருமைகுரிய விழாவாகும். எனவே அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ. 62.77 கோடி செலவில் 5 தளங்களுடன் பிரம்மாண்டமான வடிவில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டு 24.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்  

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னதத் தலைவர் - இந்திய அரசியலின் எழுச்சி வேந்தர்- ஆட்சிக் கலை அறிஞர்-  ஜனநாயக சிற்பி- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் 53.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிலவறையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் புதிய தொழில்நுட்பத்தில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ள  கலைஞர் நினைவிடம் நாள்தோறும் சுற்றுலா மையம் போலப் பலராலும் பார்வையிடப்பட்டுப் பாராட்டப்படுகிறது. இதுவரை கலைஞர் நினைவிடத்தை ஏறத்தாழ 63 இலட்சம் மக்கள் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குமரிமுனையில் கண்ணாடி இழைப் பாலம் 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1.1.2000 புத்தாயிரம் ஆண்டின் முதல் நாளில் குமரி முனையில் முக்கடல்களும் கூடும் இடத்தில் கடல் அலைகளின் நடுவே, அய்யன் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவி, தற்போது  25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைச் சிறப்பிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் தமிழறிஞர் பெருமக்கள் பங்கேற்ற கவியரங்கம், கருத்தரங்கம், இசையரங்கம் என மாபெரும் முத்தமிழ் விழாவாக நடத்தி மகிழ்ந்தார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவாக அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ. 37 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தினைக் கட்டி, 30.12.2024 அன்று திறந்து வைத்து மகிழ்ந்தார்கள். தமிழ்நாடு மட்டும் அல்லாமல், இந்தியத்  திருநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து புதுமையான கண்ணாடி இழைப் பாலத்தின் மீது நடந்து சென்று, கண்ணாடி இழைகளின்  வழியே பாறைகளின் மீது மோதி அலைகள் வீசும் காட்சிகளைக் கண்டு,  வியந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்திப் பாராட்டி வருகிறார்கள். 

முதலமைச்சர் அவர்களால் இவை மட்டுமல்லாமல், மேலும் பல புதிய கட்டமைப்புகள் எழுந்த  வண்ணம் உள்ளன. 

  • புதுடெல்லி சாணக்கியபுரியில் ரூ. 257 கோடியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வைகை தமிழ்நாடு இல்லக் கட்டடங்கள். 

  • கோவை மாநகரில் கட்டப்படும் ரூ. 300 கோடி மதிப்பிலான தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம். 

  • திருச்சி மாநகரில் கட்டப்படும் ரூ. 290 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம். 

  • செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் 

முதலிய பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் பல்வேறு உயர் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. 

இப்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமைகள் சேர்க்கும் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி, திராவிட மாடல் அரசின் பொற்கால ஆட்சியைப் படைத்துப் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார்கள். 

புத்தம் புதியஉயர் தொழில்நுட்பங்களுடன் கட்டப்படும் கலைச் செல்வங்களாம் இந்த முத்திரைத் திட்டங்கள் எல்லாம் எதிர்கால வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக்  கலை’’ எனப் போற்றிப் புகழப்படும் பெருமைக்குரிய கட்டடங்களாகத் திகழும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. 

Also Read: “தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தலைநிமிர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!