Tamilnadu
அலையாத்தி தோட்டம் எழுப்புதல் நிகழ்வு! : அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்!
உலக அலையாத்திக் காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 26ம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொது மக்களிடையே அலையாத்தி காடுகள் பாதுகாப்பு, முக்கியத்துவம் மற்றும் நீடித்த நிலைத்த மேலாண்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகையால், இவ்வாண்டிற்கான உலக அலையாத்தி காடுகள் தினத்தினை (ஜூலை 26) உலக அளவில் அலையாத்தி காடுகளின் உயிர்ச்சூழல் பாதுகாப்பினையும் அதனைச் சார்ந்த ஈரநிலங்களின் எதிர்காலப் பாதுகாப்பினையும் கருவாகக் கொண்டு கொண்டாட உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரு நீடித்த நிலையான எதிர்காலத்திற்கு குறிப்பாக கரிமத் தேக்கத்திற்கான இயற்கை சார்ந்த தீர்வாக திகழ்ந்து வரும் அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவம் புலனாகிறது.
எனவே 1076 கி.மீ. தூரம் கடற்கரை கொண்ட நமது தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் ஆழிப்பேரலை, புயல் மற்றும் கடல் அரிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து கடற்கரையோர வாழ்விடங்களைப் பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழ் நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் கீழ் கடலோர மாவட்டங்களில் உயிர்க் கேடயங்கள் அமைப்பதன் மூலம் கடலோர வாழ்விட மேம்பாடு எனும் திட்டத்தினைத் தொடங்கி 2023-24ம் முதல் 2025-26ம் ஆண்டு வரை ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் காலநிலை மாற்றம் இயக்கம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக இதுவரை மொத்தம் 2,436 எக்டர் பரப்பளவிற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அலையாத்தி மரங்கள் நடவு செய்யப்பட்டு காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் 1,207 எக்டர் பரப்பளவில் ஏற்கெனவே உள்ள அலையாத்திக் காடுகளில் சிதைவுற்ற பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளூர் மக்களை உறுப்பினராகக் கொண்ட கிராம அலையாத்திக் குழுக்களின் பங்களிப்புடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 2025-26ம் ஆண்டில் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடல் நீர் மட்டம் உயர்வு மற்றும் கடல் அரிமானம் ஏற்படுதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக உயிர்க் கேடயங்கள் ஏற்படுத்துதல் எனும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் திட்டம் மூலம் 6 இலட்சம் அலையாத்தி மற்றும் அதனை சார்ந்த செடிகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த உலக அலையாத்திக் காடுகள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று, சென்னை அடையாறு முகத்துவாரப் பகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில், அலையாத்தி வகை செடிகளை நடவு செய்து 2025-ம் ஆண்டிற்கான உலக அலையாத்திக் காடுகள் தினம் கொண்டாடப்பட்டது.
Also Read
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
-
தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பது எப்போது? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்விகளை எழுப்பிய கணபதி ராஜ்குமார் MP!
-
பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மருந்துகள் தரமானவையா? : மக்களவையில் மலையரசன் MP கேள்வி!
-
பொதுப்பணித்துறையின் சாதனைகள்... வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என புகழப்படும்!
-
“நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!