Tamilnadu

“2026 தேர்தலை நோக்கி, மக்களின் பேராதரவுடன் தி.மு.க கூட்டணி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திருவண்ணாமலை மாநகரில் இன்று (ஜூலை 13) அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான எ.வ.வேலுவின் சகோதரர் மனோகரனின் மகன் பிரபுதேவா- ரவீணா இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தார் கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர், “நேற்றைய நாள் (ஜூலை 12) நான் திருவண்ணாமலைக்கு வருகை தந்தேன். அப்போது, வழி நெடுகிலும் கழகத்தினரும் மக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்களுக்கு மிக்க நன்றி.

இன்றைய நாள் இந்த திருமண நிகழ்ச்சி தொடங்கி, இரவு வரை திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருமண விழா நாளில் கூட, கழகத்திற்கு உழைக்கும் பேராற்றல் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

அப்படி, அமைச்சர் உள்ளிட்டு கழகத்தினர் அனைவரும் கழக வெற்றிக்காக நாள்தோறும் களப்பணியாற்றி வருகின்றார்கள். இவ்வேளையில், திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசேர்ப்பது நம் கடமையாகும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்று இட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம் திட்டம்தான். கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் வழி, தமிழ்நாட்டு மகளிர் 730 கோடி முறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு வருகை தந்து, தடையற்ற கல்வி பயில வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம்தான், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’. இதனால், நாள்தோறும் சத்தான உணவுகளை உட்கொண்டு 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

இதுபோன்ற ஏராளமான திட்டங்களால் 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100 விழுக்காடி வெற்றியை அளித்தார்கள் மக்கள். இதே வெற்றியை, 2026 தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதற்கான முன்னெடுப்பாகதான் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களை ஒன்று திரட்டுவோம். பாசிசத்தை விரட்டியடிப்போம்.

இறுதியாக, மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள், இருவரும் சம உணர்வோடு வாழ்க்கையை தொடருங்கள். குழந்தைகளுக்கு இனிமையான தமிழ் பெயரை சூட்டுங்கள், நன்றி” என்றார்.

Also Read: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து - 5 மணிநேரமாக தொடரும் மீட்புப் பணி!