Tamilnadu
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
தனித்து ஒளிரும் நட்சத்திரம் - கலைஞர் (3)
திரைக்கதை வசனக் கர்த்தாவுக்காகப் படம் ஓடியதென்றால் அது கலைஞருக்கு மட்டும்தான். கதாநாயகன், கதாநாயகி பெயர்களைவிட, கதை வசனம் எழுதிய கலைஞரின் பெயர்தான் போஸ்டர்களில் பெரிதாக இருக்கும். கலைஞரின் கருத்தாழமிக்க கதை வசனத்துக்காகவே வெற்றி பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. 1965இல் ‘பூமாலை’ என்ற படத்திற்கு, ‘இயற்கையே இனிமேலாவது பெண்களுக்கு சிங்கத்தின் பற்களைக் கொடுத்துவிடு. புலியின் நகத்தைக் கொடுத்துவிடு. மத யானையின் பலத்தைக் கொடுத்துவிடு’ என்று ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் - 1953இல் ‘பேசத் தெரிந்த பெண்களையே பேச மடந்தைகளாக்கிவிடும் இப்பத்தியக்காரச் சமூகம், ஊமைகளையா விட்டுவைக்கப் போகிறது” என்று எழுதி, பெண்களுக்குப் பலத்தைக் கொடுத்துவிடு என்று இயற்கையிடம்தான் கோரிக்கை வைக்கிறார். சினிமாவுக்குத்தானே எழுதுகிறோம் என்று மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்கவில்லை.
‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று அறிவித்தது மட்டுமல்ல, தன்னுடைய வாழ்நாளெல்லாம் மானமிகு சுயமரியாதைக்காரனாகவே வாழ்ந்தவர். அதனால்தான் தன்னுடைய கோரிக்கையை இயற்கையிடம் வைக்கிறார். பகுத்தறிவுவாதியாக இருந்த காரணத்தினால்தான் 1989இல் ‘நியாயத் தராசு’ என்றது திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதும்போது ‘நாள், நட்சத்திரம், ராகு காலம், சூலம், எமகண்டம் எல்லாம் பார்த்துத்தான் ராக்கெட் பறக்க விட்டாங்க. அது ஆகாயத்தில் போகாம கடலுக்குள் விழுந்தது” என்று எழுதினார். திரைக்கதை வசனம் எழுதும்போதுகூட அவர் தன்னுடைய கொள்கைகளிலிருந்து அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகியதில்லை. சமரசம் செய்துகொண்டதில்லை. 1957இல் ‘அணைய விளக்கு’ என்ற திரைப்படத்தில், ‘நான் தேர்ந்தெடுத்த பாதை அரசியல் பாதை. வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் குளிர் சோலையும், கடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பதுங்கி ஓடுபவன் அல்ல நான்’ என்று எழுதியிருப்பார். எதை எழுதினாலும், அதில் தான் யார், தன்னுடைய கொள்கை என்ன, லட்சியம் என்றால் நேரடியாகவே சொல்லிவிடும் துணிச்சல் கலைஞருக்கு இருந்தது. அதே நேரத்தில் சமூகத்திற்குக் கேட்டவர்கள் பற்றிப் பேசுவதற்கு அவர் தயக்கம் காட்டியதே இல்லை என்பதற்கு 1966இல் ‘அவன் பித்தனா’ என்ற திரைப்படத்திற்கு அவர் எழுதிய வசனமே சாட்சி.
‘ஒற்றுமை பேசி வேற்றுமை வளர்ப்போர், ஊரையடித்து உலையில் போடுவோர், ஒருவர் தேவைக்கே இவ்வுலகு உண்டு என்று கூறுவோர், வண்ணத்தமிழ். அழிப்போர், வளர்த்தொழில் வாழாது கெடுப்போர். ஏமாற்றக் கற்றவர், ஏமாறி இளையவர், இவர்களுக்கு மத்தியில் கொள்கை சிங்கங்கள், கொள்கை மாறாத தங்கங்கள் இவர்கள் அத்தனை பேரும் பைத்தியக்காரர்கள் நானும் பைத்தியக்காரன்தான்’. இந்த வசனத்தில் கொள்கைவாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்குமான வேறுபாட்டைத் தெளிவுபடுத்தியிருப்பார்.
‘புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக்காற்றே, புறமுதுகு காட்டி ஓடும் கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே’ என்ற ‘மனோகரா’ திரைப்படத்தில் 1957இல் எழுதி, புறநானூற்றையும் கலிங்கத்துப்பரணியையும் ஒரு வாக்கியத்தில் இணைத்திருப்பது கலைஞரின் அறிவுக் கூர்மைக்கு எடுத்துக்காட்டு.
“நீதித் தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே! உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?” என்று 1964இல் பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துக் கேட்ட கேள்விகள். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மட்டுமல்ல, அறம் தவறி ஆட்சி செய்யும் மன்னர்களுக்கெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. சிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் எளிய மனிதர்களிடம் பூம்புகார் திரைப்படத்தின் மூலம் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை கலைஞருக்கு மட்டுமே உரியது. புராண, இதிகாசக் கதைகளையே தமிழ் சினிமா காட்டிக்கொண்டிருந்த போக்கை மாற்றி, சமூகப் படங்களை முன்னிறுத்தியவர். சமஸ்கிருதம் கலந்த உரையாடலை மாற்றி தூயத் தமிழில் பேச வைத்தவர். அதனால்தான் அவர் இன்று தமிழ் சினிமாவின் வெளிச்சமாக இருக்கிறார். கலைஞரை நாடறிய செய்தது அவருடைய திரைக்கதை வசனங்கள்தான். அவர் அரசியலில் புகழ் பெறுவதற்கும், அதிகாரத்திற்கு வருவதற்கும் அடித்தளம் அமைத்துக்கொடுத்தது அவருடைய திரைக்கதை வசனங்கள்தான். அவர் அளவிற்குக் கதாபாத்திரங்களின் உரையாடலை நேர்த்தியாகக் கையாண்ட பிறிதொரு திரைக்கதை ஆசிரியரைப் பார்ப்பது அரிது. 70-80 ஆண்டுகள் கழிந்த பின்பும் கலைஞருடைய திரைக்கதை வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன, மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இது எந்தத் திரைக்கதை வசனக் கர்த்தாவுக்கும் கிடைத்திராத பெருமை.
சினிமாப் பாடல்கள்
‘கலைஞரின் படைப்புலகம்’ என்ற இந்த நூலைத் தொகுக்கிற வேலையில் ஈடுபட்டபோதுதான், அவர் எழுதிய திரையிசைப் பாடல்களை முழுமையாகக் கேட்டேன். ஒருசில பாடல்களை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்கும்போதெல்லாம், கலைஞர் எழுதிய பாடல்கள் என்று தெரியாது. ‘உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக...’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் வேறு யாரோ எழுதிய பாடல். நினைத்துக் கொண்டிருந்தேன். கலைஞர் எழுதிய பாடல் ‘மறக்க முடியுமா’ என்ற திரைப்படத்தில் வரும், ‘காகித ஓடம், கடலலை மீது, போவதுபோலே மூவரும் போவோம்’ என்ற பாடலும், ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வரும் ‘வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம்’, ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான், அவர் கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ என்ற பாடலும்தான் என் நினைவுக்கு வரும். 20 படங்களுக்கு மேல், 53 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது.
அவருடைய மேடைப் பேச்சுகள், சட்டமன்ற உரைகள் பேசப்பட்ட அளவிற்கு, அவருடைய திரைக்கதை வசனம், நாடகங்கள் பேசப்பட்ட அளவிற்கு, அவருடைய திரையிசைப் பாடல்கள் பேசப்படவில்லை. கலைஞரேகூட தான் எழுதிய திரையிசைப் பாடல்கள் குறித்து அதிகம் பேசவில்லை.
சிறுகதை, நாவல், நாடகம் எழுதும்போது சுதந்திரம் திரையிசைப் பாடல்கள் எழுதும்போது இருக்காது. மெட்டிற்கு ஏற்றவாறு, இயக்குநர், தயாரிப்பாளர் விரும்புகிற மாதிரிதான் பாடல் எழுத வேண்டும். எழுத முடியும். தன்னிஷ்டத்திற்குக் கருத்து பிரச்சாரத்தை, கொள்கை பிரச்சாரத்தைச் செய்ய முடியாது. ஆனால் கலைஞர் செய்திருக்கிறார். அதுதான் அதிசயம். அவர் எழுதியிருக்கிற திரையிசைப் பாடல்களைக் கேட்டால், திரையிசைப் பாடல்களையும் அவர் அரசியல் செய்வதற்கான கருவியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரியும்.
1950இல் வெளிவந்த ‘மந்திரி குமாரி’ திரைப்படத்திலிருந்து ஆரம்பித்து, 1993இல் வெளிவந்த ‘மதுரை மீனாட்சி’ என்ற திரைப்படம் வரை பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். எந்த இடத்தில் இருந்தாலும், எந்தக் காரியத்தைச் செய்தாலும் ‘நான் கலைஞர் மு. கருணாநிதி’ என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொள்வதுபோல, தன்னுடைய கருத்து இது, கொள்கை இது என்று அறிவித்துக்கொள்வதிலும் தயங்காதவர். அவருடைய அரசியல் நிலைப்பாட்டை, அவர் எழுதிய திரையிசைப் பாடல்களிலும் காண முடியும்.
‘வதனமே சுந்தர பிம்பமோ / வசந்தருது மன மோகனமோ / என் ஜீவப்ரிய ஷியாமனே’ என்ற வகையில் சமஸ்கிருதம் அதிகம் கலந்து எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் கலைஞரின் பாடல்கள் புது மொழியைத் தமிழ்த் திரையிசைக்குக் கொண்டுவந்தன.
1963இல் ‘காஞ்சித் தலைவன்’ என்ற திரைப்படத்திற்கு ‘வெல்க காஞ்சி, வெல்க காஞ்சி, வெல்க வெல்கவே’ என்று கலைஞர் எழுதிய பாடலைத் தணிக்கைத் துறையினர். மறுத்தனர். உடனே கலைஞர் ‘வெல்க நாடு, வெல்க நாடு, வெல்க வெல்கவே / படைகள் வெல்கவே’ என்று மாற்றி எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் எழுதப்பட்டு 61 ஆண்டுகளாகிவிட்டன. இப்போது கேட்டாலும், புதுப் பாடலைக் கேட்பதுபோல இருக்கிறது. . தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தாய்நாட்டிற்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகம் தரக்கூடிய எழுச்சியை உண்டாக்கக்கூடிய பாடல்கள்.
கலைஞர் வீரம், சோகம், கண்ணீர், அறம், காதல், நகைச்சுவை என மனித உணர்ச்சிகளை எந்தெந்த விதங்களில் வெளிப்படுத்த முடியுமோ அத்தனை வகையான பாடல்களையும் எழுதியிருக்கிறார். திரையிசைப் பாடல்களில்கூட தமிழ் மொழியின் அழகை, திருக்குறளின் பெருமையைப் பேசியிருக்கிறார்.
1952இல் வெளிவந்த ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற ‘பூமாலை நீயே புழுதி மண் மேலே’ என்ற பாடலும், 1966இல் வெளிவந்த ‘மறக்க முடியுமா’ படத்தில் இடம்பெற்ற, ‘காகித ஓடம் கடலலை மீது போவதுபோல மூவரும் போவோம்’ என்ற பாடலும் கலைஞர் எழுதிய சோகப் பாடல். கண்ணீரை வரவழைக்ககூடிய பாடல் எழுதினாலும் இதே பாடலில், ‘அழுவதை கேட்க ஆட்களும் இல்லை, ஆறுதல் வழங்க யாருமே இல்லை, ஏழைகள் வாழ இடமே இல்லை, ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை’ என்ற வரிகளில் கலைஞரின் கொள்கைபதிவாகி இருப்பதை அறியலாம். குழந்தைக்குத் தாலாட்டுப் பாட்டு எழுதினால்கூட, ‘தமிழே தேனே தாலேலோ’ என்றுதான் எழுதியிருக்கிறார்.
1960இல் வெளிவந்த ‘குறவஞ்சி’ படத்தில் வரும் ‘அலையிருக்குது கடலிலே...’ என்ற பாடலில் காதலை வெளிப்படுத்தி தன்னுடைய எழுத்தின் வன்மையைக் காட்டியிருப்பார். அதே மாதிரி 1956இல் வெளிவந்த ‘ரங்கோன் ராதா’ படத்தில் ‘மணிப்புறா, புது மணிப்புறா’ என்ற காதல் ரசம் நிறைந்த துள்ளலான பாடலை எழுதியிருந்தார். இப்போது அந்தப் பாடலைக் கேட்டால்கூட, ‘எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்’ என்று ஆச்சரியப்பட வைக்கும். இதைவிட பெரிய ஆச்சரியம், ‘திருக்குறள் முன்னேற்றக் கழகம்’ என்ற பாடலையும் எழுதியிருக்கிறார்.
1988இல் வெளியான ‘மக்கள் ஆணையிட்டால்’ படத்திற்கு ‘ஆற அமர யோசிச்சுப் பாரு... அடுத்த தலைமுறையை சிந்திச்சிப் பாரு…வீணையில் எழுவது வேணுகானமா…. திருவாவடுதுறையின் தோடி ராகமா?’ என்று ஒருபாடல் எழுதியிருப்பார். சாதாரணமாக நாம் நினைக்கிற திரையிசைப் பாடல்தான். ஆனால் அதற்குள் பல நுணுக்கமான அரசியல் சொல்லாடல்களைத் திணித்துவைக்கிறார் என்பதுதான் வியப்பூட்டும் விஷயம். இதே மாதிரி 1987இல் வெளிவந்த ‘ஒரே இரத்தம்’ படத்திற்கு, ‘ஒரு போராளியின் பயணமிது... அவன் போராடிப் பெற்ற பரிசு இது’ என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இப்படியெல்லாம் திரையிசைப் பாடல் எழுத முடியுமா என்று கேட்டால் ‘முடியும்’ என்றுதான் கலைஞர் நிரூபித்திருக்கிறார். உயர் வழக்குகளும், சமஸ்கிருத வார்த்தைகளும் நிறைந்த தமிழ்த் திரையிசையில்தான் ‘எருமை கண்ணுக்குட்டி, என்னருமை கண்ணுக்குட்டி’ என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருக்கிறார்.
‘வான் மலைச் சோலையில்…. தேன் மதி காணவே... மாமுகில் ஓடுதே’ என்று வருகிற மாதிரி பழந்தமிழிலும், ‘என் வாழ்வினிலே ஒளியேற்றும் காதல் தீபம்’ என்று காதல் மொழியிலும் எழுதுவார். அதே நேரத்தில் ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால்…. பூலோகம் இருந்து போகுமா…. வானை நோக்கி திரையைப் போட்டால் வட்ட நிலவும் மறைந்துபோகுமோ’ என்று கேட்டு அறிவியலையும் எழுதுவார்.
கலைஞருடைய திரையிசைப் பாடல்கள் குறித்தும், அவர் திரையிசையில் எழுதிய அரசியல் குறித்தும் தமிழ்ச் சமூகம் இனிமேலாவது பேச வேண்டும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான் புரட்சிகரமான பாடல்களை எழுதியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அது மட்டும் உண்மை இல்லை. கலைஞரும் மிகச் சிறந்த புரட்சிகரமான, சமூகச் சீர்திருத்த கருத்துக்கள் கொண்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார் என்பது மற்றுமொரு உண்மை.
குறளோவியம்
கலைஞருக்கு அவருடைய வாழ்நாளெல்லாம் பேசிப்பேசி அலுக்காத, எழுதிஎழுதி தீராத புத்தகமாக இருந்தது திருக்குறள். தன்னுடைய 14ஆவது வயதிலேயே திருக்குறளையும் பரிமேலழகர் எழுதிய உரையையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் திறனை வளர்த்துக்கொண்டவர். அதனால்தான் 1956இலேயே குறளோவியத்தை, தினமணிக் கதிர், குங்குமம், முரசொலியில் தொடர்ந்து 30 ஆண்டுகள் எழுதி 1985இல் முடிக்கிறார்.
ஒரு நூலுக்கு உரை எழுதுவது, அதே நூலைப் பிற நூலோடு, கதைகளோடு, வரலாற்றோடு, சமூக நிகழ்வுகளோடு அரசியலோடு ஒப்பீடு செய்வது வேறு வேறானது. திருக்குறளுக்கு ஒப்பீட்டு நூலையும், விளக்க உரை நூலையும் எழுதிய ஒரே எழுத்தாளர் கலைஞர் மட்டுமே.
குறளோவியத்தில் தன்னுடைய ஒப்பீடுகளுக்கு அறத்துப்பாலிலிருந்து 76 பாடல்களையும், பொருளில் 137, காமத்துப்பாலிலிருந்து 141,, மொத்த பாடல்கள். ஒப்பீடு செய்யும்போது கூடப் பாடலிலுள்ள அமைப்பியல், அழகியல், கருத்தியல் என்ற நோக்கில்தான் ஒப்பீடு செய்திருக்கிறார். பாடலில் இருக்கிற அமைப்பு, அழகு, சொல்லுதலில் ஒப்பீடு என்ற அளவோடு நிற்காமல் அது சுட்டுகின்ற பொருள் சார்ந்த மூன்று பிரிவுகளையும் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளுக்கு ஏற்றவாரும் ஒப்பீடு செய்திருக்கிறார். இல்வாழ்க்கை, மக்கட்பேறு, அறம் போன்றவற்றை அறத்துப்பால் பிரிவிலும், பொழுது, குறிப்பறிதல், தனிபடர் மிகுதி, நலம் புனைந்துரைத்தல் போன்றவற்றைக் காமத்துப்பாலிலும், வினைத் திட்பம், இடுக்கண் அறியாமை, உட்பகை போன்றவற்றைப் பொருட்பால் பிரிவிலும் வைத்து ஒப்பீடு செய்திருக்கிறார். அதோடு அந்தந்தப் பாடல்களுக்கேற்ப எடுத்துக்காட்டுகளைத் தருவது, உவமைகள், நாம் அறிந்த கதைகள், வரலாற்று நிகழ்வுகள், சமூக நிகழ்வுகளைத் தருவது திருவள்ளுவர் நேரடியாக உரையாடுவது போல் எழுதியிருப்பதும் வாசகரைத் தன்வயப்படுத்தும் செயல். அதை கலைஞர் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். இது குறளோவியத்தில் அவர் செய்திருக்கிற மாயம்.
குறளோவியத்தில் குமண வள்ளல், இளங்கோவடிகள், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸின் மனைவி, ரோமாபுரிப் பேரரசு, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பூட்டோ, காந்தியைக் கொன்ற கோட்சே, பெரியார், ராஜாஜி போன்ற பலர் இடம்பெற்றுள்ளனர்.
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” (குறள் 580) என்ற குறளுக்கான விளக்கமாக காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் கிரேக்கத்தின் சமூகச் சிந்தனையாளர் சாக்ரடீஸுக்கும் விஷம் தந்து கொன்றவனுக்கும் எப்படிப் பொருந்தி வருகிறது என்பதைச் சொல்கிறார்.
“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.” (குறள் 792) என்ற குறளுக்கு பாகிஸ்தானின் படைத் தளபதியாக இருந்த சியா தன்னை முழுமையாக நம்பியிருந்த பூட்டோவின் அரசியல் வாழ்வு எப்படி அஸ்தமனமாக்கினார் என்பதோடு ஒப்பிட்டு எழுதுகிறார்.
“மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ” (குறள் 51) என்ற குறளுக்கு ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, மார்க்சிய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் மனைவியையும் அவருடைய தியாகத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.
ரோமாபுரி நாட்டிலிருந்து பேரரசு, அதனுடைய பொறுப்பற்ற ஆட்சி நிர்வாகத்தால், கட்டற்ற காமக்களியாட்டத்தால் வீழ்ச்சியுற்றது. உலக அளவில் மிக மோசமான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்றது என்பதைச் சொல்வதற்கு,
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (குறள் 782) என்ற பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்.
குறளோவியத்தில் பயன்படுத்தியிருக்கும் 354 பாடல்களும், அவை சுட்டுகின்ற பொருளுக்கும் ஏற்ற வகையில், எடுத்துக்காட்டுகள், கதைகள், கவிதைகள், நபர்களை, வரலாற்று நிகழ்வுகளை ஒப்பிட்டு எழுதுகிறார். குறளோவியத்தைப் படித்தால், குறள் சொல்கிற பொருளோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான விஷயங்களையும் அறிய முடியும்.
இது ‘கலைஞர் தமிழ்’ – என்று பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மிகையாக சொல்கிறார்களோ என்று எண்ணியிருக்கிறேன். குறளோவியத்தைப் படிக்கும்போது, அவர் எழுதியிருக்கிற தமிழைப் படிக்கும்போது, ‘கலைஞர் தமிழ்’ என்று ஒன்று இருக்கிறது என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன். கலைஞனின் தமிழுக்கு என்றும் அழவில்லை.
திருக்குறளை முழுமையாகப் படித்து உள்வாங்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கெல்லாம் குறளோவியம் பெரும் வெளிச்சமாக இருக்கும். திருக்குறளைக் கொண்டு உலகையே படிக்கலாம் என்பதுதான் குறளோவியத்தில் கலைஞர் தரும் முக்கியமான செய்தி.
திருக்குறள் உரை
உலகில் இதுவரை எழுதப்பட்ட நூல்களில் மிகச் சிறந்த நூல் ஒன்றைச் சொல்லுங்கள் என்று கலைஞரிடம் கேட்டால், எடுத்தது எடுப்பில், ‘திருக்குறள்’ என்றுதான் சொல்லியிருப்பார். அந்த அளவிற்கு அவர் திருக்குறளை நேசித்திருக்கிறார். இதை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மேற்கோள் காட்டவும் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின், தமிழ் மொழியின் அடையாளமாக திருக்குறளை, திருவள்ளுவரை நிலைநிறுத்தியவர்.இந்த ஒரு காரணத்திற்காகவே கலைஞரை தமிழ்நாடு, தமிழ் மொழியும் என்றும் நினைவூட்டும்.
கவிதை, நாடகம், நாவல், சிறுகதை இவையெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப, அரசியல் சூழலுக்கேற்ப அரசியல் செய்வதற்காக எழுதப்பட்டவை. ஆனால், திருக்குறளுக்கு அவர் உரை எழுதியது அவருடைய மனம் விரும்பி செய்த காரியம். ஒருவகையில் தன்னுடைய இலக்கிய ஆசானுக்கு அவர் செய்த மரியாதை. தி.மு.க.வையும், அண்ணாவையும், பெரியாரையும் எப்படி அவரிடமிருந்து பிரிக்க முடியாதோ, அதே மாதிரிதான் திருக்குறளையும் அவரையும் பிரிக்க முடியாது. அதனால்தான் உரை எழுதுவதற்கு முன்பாக, ’இமய மலைக்குப் பொன்னாடைப் போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவது,
தொடரும்..
- எழுத்தாளர் இமையம்
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!