Tamilnadu

தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.

2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சங்கரய்யா, 2022-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2023-ம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு, 2024-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) நடைபெற்றது.

இதில் மூத்த அரசியல் தலைவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

கோவையில் 2010-ஆம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர். மேலும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர், கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.

'தகைசால் தமிழர் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.

Also Read: ”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!