Tamilnadu

"இளைஞர்களுக்கானது வெற்றி நிச்சயம் திட்டம்"... அதன் சிறப்பம்சங்கள் என்ன ? - விளக்கிய துணை முதலமைச்சர் !

சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நான் முதல்வன் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் ”வெற்றி நிச்சயம் திட்டம்” தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம் :

நான் முதல்வன் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தன்னுடைய கனவு திட்டம் என்று சொல்லி 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி வைத்தார்கள். அதாவது, தமிழ்நாட்டு இளைஞர்கள் திறன் பயிற்சியோடு உயர்கல்வி பயில வேண்டும். 100 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பது தான், அவருடைய அந்தக்கனவு. அந்தக்கனவை நான் முதல்வன் திட்டம் இன்று நனவாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மையாக்கி கொண்டிருக்கிறது.

ஏனென்றால், இதுவரைக்கும் 41 லட்சம் (Skills Certificates) திறன் சான்றிதழ்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதுபோல, 3 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு, ‘நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்கள்’ (College Campus Interview) மூலம் வேலைவாய்ப்பையும் நான் முதல்வன் திட்டம் வழங்கி இருக்கின்றது.

SCOUT திட்டத்தில் பல மாணவர்கள் இங்கிலாந்து, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள நிறுவனங்களில் திறன் பயிற்சிகளை பெறுகிறார்கள். அங்கேயும் வேலைவாய்ப்பையும் பலர் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசுப்பணிகளுக்கான தேர்வுகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையோடு, பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசுப்பணிக்கு தேர்வாகும் இளைஞர்களுடைய எண்ணிக்கையை 2021 நம்முடைய அரசு அமைந்ததற்கு முன்பு, அரசு அமைந்ததற்கு பின்பு, என்று சொல்லும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நம்முடைய மாணவர்கள் UPSC தேர்வுகளில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, பள்ளி மாணவர்களுக்கும் நான் முதல்வன் ஒலிம்பியாட், உயர்வுக்குப்படி, கல்லூரி கனவு போன்ற திட்டங்களையும் நம்முடைய நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றோம். இதன் மூலம், மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏழ்மை போன்ற காரணங்களால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர முடியாமல் இருக்கின்ற மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி சேர கவுன்சிலிங், மற்றும் உதவிகளையும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்துகின்றோம்.

நான் முதல்வன் திட்டத்தினுடைய வெற்றியின் தொடர்ச்சியாகத் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இன்று “வெற்றி நிச்சயம்” என்ற திட்டத்தையும் துவங்கி வைக்கிறார்கள். “வெற்றி நிச்சயம்” என்பது இந்த திட்டத்தின் பெயர் மட்டுமல்ல. இதன் கீழ் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொரு இளைஞருக்கும் வெற்றி நிச்சயம் என்பதே இந்த அரசினுடைய, முதலமைச்சர் அவர்களுடைய ஒரே இலக்கு (Target).

Micro-Level வரை திறன் பயிற்சியை எப்படி கொண்டு சேர்ப்பது என்று யோசித்து, அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பிரத்தியேக திறன் பயிற்சி, 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமல்ல, திறன் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் நம்முடைய அரசே செலுத்தவுள்ளது.

முதற்கட்டமாக, ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. இந்த திட்டத்துக்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய நன்றி நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளிய மாணவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திறன் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கான ஊக்கத்தொகையையும் நம்முடைய அரசு சார்பாக வழங்கவுள்ளோம்.

ஆகவே, இந்த திட்டம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் வெற்றி பெற்ற சமுதாயமாக

ஆக்கப் போகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கு அதில் மகிழ்ச்சி.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.இத்தகைய சிறப்புக்குரிய திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வருகை தந்து எங்களையெல்லாம் ஊக்குவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி தெரிவித்து, மீண்டும் ஒருமுறை வரவேற்று நான் மகிழ்கின்றேன்.வெற்றி நிச்சயம் முன்னெடுப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களுடைய வெற்றிக்கு நிச்சயம் துணை நிற்கும்! நன்றி வணக்கம்!

Also Read: "நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்களின் வெற்றியை என் வெற்றியாக உணர்ந்தேன்"- முதலமைச்சர் நெகிழ்ச்சி!