Tamilnadu

2 நாட்களில் 2வது சம்பவம் இது! : மீனவர்கள் கைது குறித்து ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை நேற்று (30.06.2025) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (01.07.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், நேற்று (30.06.2025) இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டே நாட்களுக்குள் மீனவர்கள் கைது செய்யப்படும் இரண்டாவது சம்பவம் இது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், பருவகால மீன்பிடித் தடைக்குப் பிறகு சமீபத்தில்தான் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் தொடங்கியுள்ளதாகவும், ஏற்கெனவே 48 இந்திய மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: காவல் நிலைய மரண வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்! : காவலர்களை எச்சரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!