Tamilnadu

”கரும்பு விவசாயிகளுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்” : அமைச்சர் இரா.இராஜேந்திரன் அறிவிப்பு!

2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ 297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் இரா. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கடந்த மாதத்தில் எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த 5,920 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி கரும்பு கிரயத் தொகை வழங்கப்பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 16 தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/-வழங்கிடும் வகையில், ரூ.297/-கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது.

2024-25 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளுடன் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், வரலாற்றில் முதன்முறையாக சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, 2025-26 அரவைப் பருவத்திற்கு அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையை உரிய காலத்தில் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கரும்பு விவசாயிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்” : ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!