Tamilnadu

”இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்” : ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!

ஹைதராபாதிலிருந்து பெங்களுரு வரை செல்லும் கச்சிகூடா – ஏலஹன்கா எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ரயில்வே அமைச்சர் அஸ்வினி ஷைஷ்ணவ் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :

தற்போது தினமும் இயக்கப்படும் கச்சிகூடா – ஏலஹன்கா எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்திலிருந்து கர்நாடகாவின் தலைநகர் பெங்களுரு வரை செல்கிறது. இதில் பயணம் செய்யும் பயணிகளில் குறிப்பிடத்தக்க அளவினர், தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். எனவே இந்த எக்ஸ்பிரஸ் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தால், தெலுங்கானா, கர்நாடகா மக்களுக்கு, தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள நகரங்களுக்கும், கன்னியாகுமரி என்னும் முக்கியமான சுற்றுலாத்தலத்துக்கும் செல்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும். இதனால் இப்பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்குக் வேறு போக்குவரத்து மார்க்கங்களால், பயணம் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவு குறையும். மேலும், இந்த இரயிலைக் கன்னியாகுமரிவரை நீட்டிப்பதால், சுற்றுலா துறையும் வளர்ச்சிபெறும். இதனால், இப்பகுதியில் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். மேலும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் என்கிற முறையில் , இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இங்கு வாழும் பொது மக்களின் கோரிக்கையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன். எனவே, எனது இந்தக் கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை நிறைவேற்றிடும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள ஆணையிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் .

இவ்வாறு டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. அக்கடிதத்தில் கூறியுள்ளார்

Also Read: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது என்ன?