Tamilnadu

இந்த தடை கூட இருக்கக் கூடாது: புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் திருநங்கையர்களுக்கு தளர்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்டைந்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவர்கள் கல்வி தொடர்வதற்கு இத்திட்டம் பல்வேறு வகையில் உதவி வருகிறது.

இத்திட்டம் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற, திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை சான்றாகச் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பைப் முடித்து, தற்போது பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்படிப்பு பயின்று வரும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும், தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.