Tamilnadu

பண மோசடி வழக்கு: பாய்ந்த குண்டாஸ்.. புழல் சிறையில் தள்ளப்பட்ட பாஜக மு. நிர்வாகி மிளகாய்ப்பொடி வெங்கடேசன்!

சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய்ப்பொடி வெங்கடேசன். பிரபல ரவுடியான இவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தல், அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் செம்மரக் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஆந்திரா போலீசாரால் பலமுறை ைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தற்போது ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

இதனிடையே பாஜகவில் இணைந்த ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசனுக்கு, பாஜக OBC (பிற்படுத்தப்பட்டோர்) அணி மாநில செயலாளர் பதவி வழங்கியது அப்போதைய பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தலைமை. இவர் பாஜகவில் சேர்ந்த உடனேயே கட்சி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 7-ம் தேதி மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரௌடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சந்தித்த நிலையில், அது குறித்த புகைப்படத்தை வேண்டுமென்றே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநில போலீசுக்கும் டேக் செய்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கடந்த 13-ம் தேதி பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வழக்கு தொடர்பாக போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :

ஆவடி காவல் ஆணையகரத்திற்குட்பட்ட, செங்குன்றம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான KR வெங்கடேசன் @ மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்பவர் மீது, ஆவடி காவல் ஆணையகரத்தில் 05 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகளும் உள்ள நிலையில், கடந்த 12.06.2025 அன்று, முகலிவாக்கம் குமுதம் நகரைச்சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (41) என்பவர், தனக்கு கணபதிலால் என்பவர் தர வேண்டிய ரூ.87,82,586 திருப்பி தரமால் ஏமாற்றியதற்காகவும், அதனை பெற்றுத்தருவதாக கூறி KR வெங்கடேசன் @ மிளகாய்ப்பொடி வெங்கடேசன் தன்னை மிரட்டி ரூ,1 லட்சம் முன்பணமாக வாங்கியதாகவும், மேலும் 12 லட்சம் கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

புலன் விசாரணையின் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய KR வெங்கடேசன் @ மிளகாய்ப்பொடி வெங்கடேசன், கணபதிலால். மற்றும் கோகுல்வாசன் ஆகிய மூவரும் கடந்த 13.06.2025 அன்று கைது செய்யப்பட்டு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,

KR வெங்கடேசன் @ மிளகாய்ப்பொடி வெங்கடேசன் மீது தொடர்ந்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் 17.06.2025 அன்று, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: “மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” - அமைச்சர் மா.சு. பெருமிதம்!