Tamilnadu

4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக உயர்ந்த தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

திமுக அரசு பொறுப்பேற்றதும் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மாணவர்கள் அதிகளவில் பள்ளிக்கு வர ஏராளமான திட்டங்களையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

காலை உணவுத் திட்டம், SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்! "என்று கூறப்பட்டுள்ளது.