Tamilnadu

”தமிழ்நாட்டில் ஆன்மீகப் புரட்சி செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : செல்வப்பெருந்தகை பாராட்டு!

3000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து தமிழ்நாட்டில் ஆன்மீகப் புரட்சி செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.

இது குறித்து செல்வப்பெருந்தகை MLA வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மூவாயிரம் கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் குடமுழுக்கு செய்து சாதனை படைத்து ஆன்மீகப் புரட்சி செய்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், அதனை செயல்படுத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களையும் மனதார பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை போற்றுகிற வகையில், மதச்சார்பற்ற அரசாக செயல்படுவதை இந்நிகழ்வு மேலும் உறுதிபடுத்துகிறது. இதன்மூலம்விஷம பிரச்சாரம் செய்து வருகிற ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களுக்குமிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்ததற்காக ஏற்கனவே வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தோம். இன்று தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒருநாள் ஊதியமான 319 ரூபாயை 336 ஆகஉயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இதனால் 88 லட்சத்து 16ஆயிரத்து 448 பேர் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூபாய் 2900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூபாய் 1400 கோடியை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.3 கோடி நிதி : முதலமைச்சர் உத்தரவு!