Tamilnadu

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - தி.மு.கழக கூட்டணி வேட்பாளர்கள் விவரம் உள்ளே!

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் வருகிற ஜூலை 25ஆம் நாளுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ஆம் நாள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 234ஆக இருக்கும் இருக்கும் நிலையில், தி.மு.க 134 உறுப்பினர்களையும், கூட்டணி கட்சிகள் 25 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.

ஆகையால், காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான 6 இடங்களில், 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற ஜூன் 2ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தி.மு.கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா (எ) ரொக்கையா மாலிக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் உடனான ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம், ம.நீ.மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனையடுத்து, ம.நீ.மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதன்முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

Also Read: சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் பெற ஆன்லைன் விண்ணப்பம் : புதிய டிஜிட்டல் முறை அறிமுகம்!