Tamilnadu

தமிழ்நாட்டு மாணவர்களை அதிகாரிகளாக்கும் ’நான் முதல்வன்’ : வனப்பணித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவி அசத்தல்!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் இவ்வாண்டு 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்தாண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி மெயின் தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது.

நேர்முக தேர்வு முடிந்ததை அடுத்து நேற்றிரவு யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் அகில இந்திய அளவில் 24 வது இடமும், தமிழ்நாட்டு அளவில் மாணவி நிலா பாரதி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இத்தேர்வில் மாணவி நிலா பாரதி வெற்றுபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து மாணவி நிலா பாரதி," வனத்தேர்வில் இந்திய அளவில் 24 ஆம் இடமும் , தமிழ்நாடு அளவில் முதலிடமும் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயதில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வில் படித்து வெற்றி பெறுவதே எனது கனவாக இருந்தது. இந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம்தான். இந்த திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் பயனாளி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

நான் முதல்வன் திட்டத்தில் எது தேவை, எது முக்கியம் என்பதை அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த பாடத்திட்டங்களை தொடர்ந்தாலே யுபிஎஸ்சி தேர்வில் எளிதில் அனைவரும் வெற்றிபெற முடியும்" என தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் கவிஞர் வெண்ணிலா, ”நான் முதல்வன் திட்டம் என்பது இந்தியாவிற்கே ஒரு முன்னோடி திட்டம் என்றே கூறலாம். தனியார் நிறுவனம் அவர்களுடைய வெற்றிக்கு எந்த அளவிற்கு பாடுபடுவார்களோ, அந்த அளவிற்கு அரசுத்துறை பாடுபடுவதை நான் முதல்வன் திட்டத்தில் பார்க்க முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் ரூ.255.60 கோடியில் 20 புதிய திட்டப் பணிகள் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!