Tamilnadu

தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக வந்தோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் நன்றி சொன்ன மாணவர்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆப்ரேசன் சிந்தூர் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயில சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு திரும்ப இயலாத நிலையில், துரித நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததற்காக அம்மாணவ, மாணவியர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 22.04.2025 அன்று ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசாரான் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்று தமிழ்நாடு திரும்ப இயலாமல் சிக்கித் தவித்த 154 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியினால் பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆப்ரேசன் சிந்தூர் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு (NIFT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT) உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர குடும்பத்தினரிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றது.

இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக, புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அவர்களின் தலைமையில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது மற்றும் சென்னை அயலகத் தமிழர் நல ஆணையரகத்தில் 24/7 தொலைபேசி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அயலகத் தமிழர் நலத்துறையுடன் இணைந்து, தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.அப்தாப் ரசூல், இ.ஆ.ப., ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயின்ற 242 மாணவர்கள் புதுதில்லி தமிழ்நாடு இல்லம் மூலம் விமானம் மற்றும் இரயில் வாயிலாக தமிழ்நாடு வந்தடைந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆகியோர் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பாக தமிழ்நாடு வந்தடைந்த அம்மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்றையதினம் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, அரசு எடுத்த உடனடி நடவடிக்கையினை பாராட்டி தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Also Read: வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!