Tamilnadu

போர் பதற்றம் : ஜம்மு-காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை - உதவி எண் அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22.4.2025-அன்று சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவிமையம் தொடங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் உதவி மையம்தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு,அவர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது, தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளநிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த 52 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

இந்த வேண்டுகோளுக்கு இனங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.அப்தாப் ரசூல், இ.ஆ.ப., ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழ்நாட்டுமாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவர்களை சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்துவருவதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழ்நாட்டு மாணவர்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு - சென்னையில் நாளை பேரணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!