Tamilnadu

”மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள். இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர்!

வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

மகத்தான மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்!

உழைப்போர்க்கு உறுதுணையான மார்க்சியச் சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை! - நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதலமைச்சர்!