Tamilnadu

"பாவேந்தரின் புகழ் ஓங்குக! தமிழர் வெல்க!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் !

தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ என அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெற்ற விழாவில் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மேலும், 5 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கு நூலுரிமைத் தொகையும் வழங்கப்பட்டது.

இதனைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பதிவில், " திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை!

தமிழ்நாடெங்கும் நடைபெற்ற தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே…பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்!இது போதுமா?

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்! தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க!" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "கடல் வளம் எல்லாம் அதானி, அம்பானிக்கே சொந்தம் என பாஜக நினைக்கிறது" - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் !