Tamilnadu
”முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-
நம்முடைய உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை , ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன் , டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன்,தி.வேல்முருகன், பின்னர் அவர்களைத் தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர் அவர்கள், அதேபோல், பேரவைத் தலைவர் அவர்கள் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு - எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு - விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே, நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டதைப்போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களது பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன் என்று சொல்லி நான் அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!