Tamilnadu

கைவிட்ட தனியார் மருத்துவமனை - 7 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு 7 வயதில் கனிஹீ என்ற பெண் பிள்ளை உள்ளது.

இந்நிலையில் சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது பாட்டி சிறுமியிடம் 5 ரூபாய் நாணயம் ஒன்றை கொடுத்துள்ளார். இதை வாங்கிய சிறுமி, தவறுதலாக விழுங்கியுள்ளார்.

இதில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே இதுபற்றி அறிந்த பெற்றோர் சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிறகு, சிறுமியின் பெற்றோர்கள் சற்றும் தாமதிக்காமல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனே சிறுமியின் உடல் நிலை குறித்து காது மூக்கு தொண்டை நிபுணரான தீபானந்தன் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த மருத்துவர் விடுமுறையில் இருந்தபோதும், 7 வயது சிறுமியின் நலன் கருதி விரைந்து மருத்துவமனைக்கு வந்து உரிய சிகிச்சை கொடுத்த உயிரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து மருத்துவ குழுவிற்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

”அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறோம். அவசரம் என்ற சூழ்நிலையில் ஓடி வருவதுதானே மனிதாபிமானம்” என மருத்துவர் தீபானந்தன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: ”அனைவரது வீடுகளிலும் அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும்” : அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்!