Tamilnadu
”மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி”: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது; அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருமிதத்தோடு ஆற்றிய உரை:-
பேரவைத் தலைவர் அவர்களே, அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சற்றுமுன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார்.
அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பிவைத்தோம். இரண்டாவது முறை சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும் தெரிவித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!