Tamilnadu

சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன்MP கடிதம்

விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) என்ற அமைப்பு, அதன் விமான நிலைய சேவை தரக் (ASQ) கணக்கெடுப்பில் '2024 ஆம் ஆண்டிற்கான பட்டியலில், தென்னிந்தியாவின் நுழைவாயிலாக அமைந்துள்ள சென்னை விமான நிலையம் உலகளவில் 56வது இடத்திலிருந்து 63வது இடத்திற்கு தரம் குறைந்துள்ளது' என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எம்.பி. ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு

ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சென்னை விமான நிலையத்தின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளை விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) சுட்டிக்காட்டி உள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்

நாட்டிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் நுழைவாயிலாகவும் திகழும் சென்னை விமான நிலையம், உலகளவில் 56வது இடத்திலிருந்து 63வது இடத்திற்கு சரிந்துள்ளது. பெங்களூரு மற்றும் மங்களூருவில் உள்ள தனியார் விமான நிலையங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்கள் அதிக பயணிகள் நடமாட்டம் உள்ள மையங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. ஆனால், இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சென்னை விமான நிலையம் உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் சேவை தரத்தில் கணிசமாக பின்தங்கியுள்ளது. அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், தொடர்ந்து நிலவும் இன்னல்கள் என்னவென்றால்

நெரிசலான ஓய்வறைகள் மற்றும் தூங்கும் அறைகள்

அசுத்தமான கழிவறைகளால், சுத்தத்தின் தர அளவு 2023 இல் 4.90 ஆக இருந்து 2024 இல் 4.71 ஆக சரிந்துள்ளது

மிகக் குறைந்த மதிப்பீடு (4.64) கொண்ட தரமற்ற உணவு வசதிகள்

போதுமான வரவேற்பு வசதிகள் இல்லாமை, தெளிவற்ற திசைக் குறியீடுகள்

தரமற்ற வைஃபை (WiFi) வசதி, உள்ளூர் சிம் கார்டு இல்லாத வெளிநாட்டு பயணிகளுக்கு OTP பெறுவதில் சிரமம்

விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால் வாகனங்களை அணுகுவதில் சிக்கல்

கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த முனையம் தொடங்கப்பட்டது ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், விமான நிலையம் தொடர்ந்து மோசமான உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. பெருநகரமாகவும், சர்வதேச அளவில் முக்கிய நகரமாவும் வளர்ந்து வரும் சென்னையின் பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படவில்லை.

உடனடியாக நிலுவையில் உள்ள மேம்பாடுகளை விரைவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) ஒன்றிய அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை நம் சர்வதேச புகழை குறைப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மோசமான அனுபவத்தையும் தந்துவருகிறது.

சென்னைக்கு உரிய உலகத்தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய உங்களது உடனடி நடவடிக்கைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் வசதிகளில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை சரிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா?” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!