Tamilnadu
“நாடாளுமன்ற மறுசீரமைப்பை இந்தியாவின் தெற்கு ஏன் எதிர்க்கிறது?” - ‘தி எகானமிஸ்ட்’ சிறப்புக் கட்டுரை!
“இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பை இந்தியாவின் தெற்கு ஏன் எதிர்க்கிறது”
உலகப் புகழ்பெற்ற ‘தி எகானமிஸ்ட்’ இதழின் “ஆசியா” பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை.
இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்வியலின் ஒரு அங்கமாகிவிட்டது. பதின்ம வயதில் அரசியலுக்குள் நுழைந்த அவர், மாநில சுயாட்சிக்கான நகர்வுகளிலும், வட இந்திய ஆதிக்க மொழியான இந்தி மொழியை தேசிய மொழியாக நிலைநாட்டுவதைத் தடுக்கும் முயற்சியிலும் தனது தந்தைக்கு உறுதுணையாக இருந்தார்.
23 வயதில், 1975-77 காலக்கட்டத்தில் சிவில் உரிமைகளைப் பறிக்கும் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் சிறையிலடைக்கப்பட்டார். அப்போதைய தாக்குதலில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இப்போதும் அவரது வலது கையில் உள்ளது.
இப்போது 72 வயதில், அவருடைய அரசியல் வாழ்க்கையை வரையறுக்கும் மற்றும் இந்திய அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் தேசிய அதிகாரத்துடனான தனது போராட்டத்தின் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களுக்கான இடங்களை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார்.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, தற்போதைய உச்சபட்ச இடங்களை வரையறுத்துள்ள 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின் ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றத்தைப் பிரதிபலிக்கும் என இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே அளவிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் இது நாடாளுமன்றத்தை இன்னும் ஜனநாயகப்படுத்தும் என்கின்றனர்.
மக்கள்தொகை அதிகம் கொண்ட – ஏழ்மையான வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் செல்லும் எனும் அச்சத்தின் காரணமாக இதற்கு எதிரான முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்துகிறார். இந்த முயற்சியானது, மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தெற்கைத் தண்டிப்பதோடு, மோடியின் பாரதீய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்தும் வடக்கிற்கே பலனளிக்கும் என்றும் அவர் சொல்கிறார்.
“இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, தேசிய அளவிலான முடிவெடுக்கும் அதிகாரத்தில் தென்மாநிலங்களின் குரலைத் திட்டமிட்டுச் சீர்குலைப்பதோடு, ஒரு நிரந்தர அரசியல் சமமின்மையை உருவாக்கக்கூடும். நாங்கள் அமைதியான பார்வையாளர்களாக இருக்க முடியாது.” என்று எழுத்து மூலமாக அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 22-ஆம் நாள், மு.க.ஸ்டாலின் நான்கு மாநில அரசியல் தலைவர்களைக் கொண்ட “கூட்டு நடவடிக்கைக் குழு”-வின் முதலாவது கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு (1976-லும் 2001-லும் செய்ததைப் போல) தள்ளிவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அந்த மாநிலங்களில், தெற்கில் உள்ள ஐந்தில் மேலும் மூன்று மாநிலங்களும் (கர்நாடகா, கேரளா, தெலங்கானா) வடக்கிலிருந்தாலும் குடும்பக் கட்டுப்பாட்டை ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படுத்திய பஞ்சாப் மாநிலமும் உள்ளடங்கும். இதில், பா.ஜ.க.வுடன் தேசிய அளவில் கூட்டணியைச் சேர்ந்த ஆளுங்கட்சி உள்ள ஒரே தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் பங்கேற்கவில்லை.
பிரித்து ஆளுதல்
ஒருமாத கால எதிர்ப்பு மற்றும் தீவிரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு அந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் விகிதாசார (ப்ரோ-ரேட்டா) அடிப்படையில் தென்மாநிலங்கள் ஓர் இடத்தைக் கூட இழக்காது என்று உறுதியளித்தார். “எத்தனை இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தென்மாநிலங்களுக்கான நியாயமான பங்கு கிடைக்கும்” என்றும் அவர் கூறினார். போதிய விளக்கங்கள் இல்லாத அவரது கூற்று, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.
அமித்ஷாவின் கருத்தில் தெளிவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த அரசின் திட்டம் குறித்து திரு. அமித்ஷாவுக்கு அத்தனை தெளிவு இருப்பின், அதனைப் பொதுக் கூட்டங்களில் சாதாரண கருத்துகளாக வெளியிடுவதை விட, நாடாளுமன்றத்தில் முறையாக முன்வைக்க வேண்டும் என்கிறார் மு.க.ஸ்டாலின். மேலும் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை (2016), இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை ரத்து செய்தது உள்ளிட்ட திடீர் மாற்றங்களைத் திணித்ததை சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சர்ச்சை, இந்தியாவின் வடக்கு மற்றும் தென்மாநிலங்கள் இடையே அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிளவை ஆழப்படுத்துவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விவகாரம் நீண்டகால வரலாற்று வேர்களைக் கொண்டது. ஆனால், திரு. மோடியின் இந்துத்துவ தேசிய வாதத்தின் மீதான தெற்கின் வெறுப்பும் தென்மாநிலங்கள் பொருளாதார - சமூக வளர்ச்சியில் முன்னேறி இருப்பதும் அண்மைக் காலங்களில் இது வெளிப்படையாக வளர்ந்திருப்பதற்குக் காரணமாகும். பெரும்பாலான தென்னிந்திய மக்கள் தற்போது தாங்கள் செலுத்தும் வரியின் பெரும் பகுதி வடமாநிலங்களுக்குச் செலவிடப்படுவதாக உணர்கிறார்கள்.
இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவது கடினமாக இருப்பதாக வடமாநிலத்தவர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, வடமாநிலமான உத்தரப்பிரதேசம் 238 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் பெரிய மாநிலமாகும். இந்த மாநிலத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கான சராசரி மக்கள் தொகை 30 லட்சமாக உள்ளது. தென்மாநிலமான தமிழ்நாட்டில் இது 20 லட்சமாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகாரில் கருவுறு விகிதத்தை மாற்று அளவை விடவும் கூடுதலாக, ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. அதே நேரத்தில், அனைத்துத் தென்மாநிலங்களிலும் கருவுறு விகிதம் இதைவிடக் குறைவாக உள்ளதால், இந்த முரண்பாடு மேலும் மோசமான நிலையை அடைகிறது.
இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வு இல்லை. முதல் வழி, மக்களவையின் தற்போதைய அளவைப் பேண வேண்டும், ஆனால் புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்களை மறு பங்கீடு செய்ய வேண்டும். அடுத்து, தென் மாநிலங்கள் தற்போதுள்ள இடங்களைப் பெற, மக்களவையின் தற்போதைய எண்ணிக்கையை 848 இடங்களாக அதிகரித்து, மக்கள் தொகை விகிச்தாசார அடிப்படையில் தென்மாநிலங்களுக்கு புதிய இடங்களை ஒதுக்குவது இரண்டாவது வழி என்று அமெரிக்காவின் கார்னகி உலக அமைத்திக்கான அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace) என்ற ஆய்வுக்குழு கணித்துள்ளது.
அதுதான் பிரதமர் மோடியின் விருப்பமாக இருக்கிறது. அதையொட்டித்தான் 2023-இல் திறந்துவைத்த புதிய நாடாளுமன்றக் கட்டடம் 888 மக்களவை இருக்கைகளைக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் தங்களது பங்கினைக் குறைத்து பா.ஜ.க. அதிகாரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ளவே இது வழிவகுக்கும் என்பதால் தென்மாநிலங்கள் இந்தத் தேர்வையும் எதிர்க்கிறார்கள். தமிழ்நாடு தற்போது கொண்டுள்ள அதே அளவிலான விழுக்காடு இடங்களை அளிக்கும் பார்முலாவை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
மோடி அவர்கள் மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் எண்ணிக்கையைக் கொண்டு திணிக்கக் கூடும். எதிர்க்கட்சித் தலைவர்களை இதற்கு இணங்கச் செய்ய அவருக்குச் சில வழிகள் உள்ளன. இருப்பினும், இதற்கு அரசியலமைப்பில் திருத்தம் தேவைப்படலாம். 2024-இல் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் அவருக்குத் தேவையாக இருக்கும், பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றங்களிலும் இதற்கான ஒப்புதலைப் பெறவேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் தென் மாநிலங்களில் மேலும் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் எனக் கருதும் பா.ஜ.க.வின் வாய்ப்புகளையும் அவர் அழிக்க நேரிடும்.
மறுசீரமைப்பைத் தள்ளிப் போடுவது பின்வாங்குவதாகிவிடும். எனினும், அரசியல்ரீதியாக அது சமாளிக்கக் கூடிய ஒன்றுதான். ஏனென்றால் மோடி அவர்கள் தொகுதி மறுசீரமைப்பை முடிக்க இன்னும் சரியான காலக்கெடு எதையும் அறிவிக்கவில்லை. மேலும், தள்ளிப்போட்டால் அது வட மாநிலங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கூடுதல் காலத்தை வழங்குவதாக அமையும். வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலை தேடி தென்மாநிலங்களுக்கு வரும் போக்கு தொடர்வதால், இந்தியாவுக்குள் நடக்கும் மக்களின் இடப்பெயர்வும் இந்தப் பிரச்சினையைத் தணிக்கலாம். ஆனால், அது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியாது என்று அழுத்தமாகச் சொல்கிறார் திரு. மு.க.ஸ்டாலின்.
இந்தப் பிரச்சினை உள்ளூர் அரசியலையும் உள்ளடக்கியது. தமிழ்நாட்டில் 2026 மே மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கனவு காண்கின்றனர். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மு.க.ஸ்டாலின் ஊதிப் பெரிதாக்குகிறார் எனக் குற்றம் சாட்டுகிறார்.
ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பொருத்தவரை இது ஒரு நீண்டகாலப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் அடையாளத்தை நசுக்கி, இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தில் தெற்கின் பண்பாடு ஆற்றியுள்ள பங்களிப்பை அழிக்க பா.ஜ.க. முனைகிறது என அவதானிக்கிறார். அதனால்தான், தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்துப் போராடும் அதேநேரத்தில், பழந்தமிழ் வாழிடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கும் பெரும் நிதியை ஒதுக்கி வருகிறார். மேலும், வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள வெண்கலக்கால இடங்களில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளின் எழுத்துமுறையை அறிந்துகொள்ள உதவுவோர்க்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னோர்களாக இந்து தேசியவாதிகள் கருதும் ஆரியர்களுக்கு வெகுகாலம் முன்பே, அங்கு தென்னிந்தியாவைச் சேர்ந்த திராவிடர்கள் இருந்தனர் என இதன் முடிவுகள் மெய்ப்பிக்கும் என மு.க.ஸ்டாலின் நம்புகிறார்.
பா.ஜக. ஆதரவாளர்கள் அவரின் இந்த முயற்சிகளை எள்ளி நகையாடலாம். ஆனால், தமிழ் அடையாளம் மிக வீரியமிக்க அரசியல் ஆற்றல் ஆகும். அது இதற்கு முன்பும் மைய அரசின் அத்துமீறலை, குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் தண்டித்துள்ளது. இந்தப் போராட்டங்களையெல்லாம் வழிநடத்த உதவிய தனது தந்தையின் வழித்தடத்தில் மட்டும் மு.க.ஸ்டாலின் நடைபோடவில்லை; வரலாற்றில் தனக்கான இடத்தை அவர் உறுதிப்படுத்துகிறார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!