Tamilnadu

”இந்தியாவையே தாங்கி கொண்டிருக்கும் தமிழ்நாடு” : நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு பாடம் எடுத்த திமுக MP!

குஜராத்தில் புதிய கூட்டுறவுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக MP கே.ஈ.பிரகாஷ் பேசியது வருமாறு:-

இந்த மசோதா (Bill) முதலில் என்னிடம் வந்தபோது, இதன் பெயர் "திரிபுவன் சாகரி பல்கலைக்கழக மசோதா (பில்)" என்று இருந்ததால், எனக்கு இது புரியவில்லை. பிறகு, நான் இந்த வார்த்தையின் அர்த்தத்தை தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. "சாகரி" என்றால் கூட்டுறவு என்றுபொருள் என்பதை நான் பிறகு அறிந்துகொண்டேன்.

இந்த மசோதா, கூட்டுறவுத் துறையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய பல்கலைக்கழகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம், "திரிபுவன் சாகரி பல்கலைக்கழகம்" என்று பெயரிடப்படும், மேலும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மசோதா இந்த பல்கலைக்கழகத்தை "கூட்டுறவு கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சிறப்பு நிறுவனம்" என்று விவரிக்கிறது.

தமிழ்நாடு ஏற்கனவே பல தசாப்தங்களாக கூட்டுறவு கல்வியில் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு, கூட்டுறவு பயிற்சி நிறுவனம், கூட்டுறவு வங்கி, கிராமப்புற கடன் மற்றும் நிதி குறித்த கல்வியை வழங்குகிறது; பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற எங்கள் மாநிலம், கூட்டுறவுத் துறையிலும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. 1.60 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 2 கோடியைத் தாண்டிய உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு, இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்கள் விவசாயம், பால், கைத்தறி, மீன்வளம், வீட்டுவசதி மற்றும் நுகர்பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் செயல்பட்டு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.

ஆவின்: பால் கூட்டுறவின் பொற்காலம்

தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறையின் மிகப் பெரிய பெருமை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (TCMPF), அல்லது ஆவின் என கூறபடும். ₹6,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கொண்ட நிறுவனம் ஆகும், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பால் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஈரோடு நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பால் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தின் சின்னியம்பாளையத்தில் பிறந்து, கூட்டுறவுத் துறையில் தனது அரிய பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட எஸ்.கே. பரமசிவம் அவர்களை நினைவுகூர விரும்புகிறேன். ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய இவர், "பால்வளத்த தந்தை" என்று அழைக்கப்பட்டார் மற்றும் 2010-ல் தேசிய பால் வளர்ச்சி வாரியத்திடமிருந்து டாக்டர். குரியன் விருதை பெற்றார். இவரது பணிகள், தமிழ்நாட்டின் பால் கூட்டுறவு இயக்கத்திற்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தன.

டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் NDDB தலைவராக இருக்கும்போது 1979ஆம் ஆண்டில் ஈரோடு வருகை தந்து 5000 விவசாயிகளை சந்தித்து உரையாற்றிய பெருமை ஈரோடு ஆவினுக்கு உண்டு. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), பால் மற்றும் மீன்வள மேலாண்மையில் மாணவர்களுக்கு நீண்ட காலமாக பயிற்சி அளித்து வருகிறது. புனேவில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் (VAMNICOM) 1964 முதல் செயல்பட்டு வருகிறது, மற்றும் சிறப்பு கூட்டுறவு மேலாண்மை படிப்புகளை வழங்குகிறது.

எனவே, இந்த பல்கலைக்கழகத்தில் "புதியது" என்ன?

இந்த நிறுவப்பட்ட நிறுவனங்களை அங்கீகரித்து வலுப்படுத்துவதற்கு பதிலாக, கூட்டுறவு இயக்கத்தின் முன்னணியில் இருந்த மாநிலங்களை புறக்கணிக்கும் வகையில், ஒன்றிய அரசு குஜராத்திற்கு வளங்களை திருப்பி விடுகிறது.

நாடு தழுவிய கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதாக இந்த மசோதா கூறுகிறது. ஆனால், அதன் வடிவமைப்பு பெரிதும் குஜராத்தை மையமாகக் கொண்டு உள்ளது. குஜராத்தில் உள்ள IRMA (இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்த்) பல்கலைக்கழகமாக முன்மொழியப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களில் துறை சார்ந்த பள்ளிகள் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதாவில் குறிப்பிடபட்டுள்ள பள்ளிகள் -பால் பண்ணை, மீன்வளம், சர்க்கரை, வங்கி, கிராமப்புற கடன், கூட்டுறவு நிதி, சட்டம், தணிக்கை மற்றும் பல மாநில கூட்டுறவுகள் போன்ற துறைகளில் அமைக்கப்படும். ஆனால், இந்த வளாகங்கள் எங்கே அமையும்? பால் பண்ணை மற்றும் வங்கி போன்ற கூட்டுறவுத் துறைகளில் தமிழ்நாட்டின் வரலாற்றுத் தலைமை இருந்தபோதிலும், இந்த மசோதா தமிழ்நாட்டில் எந்தவொரு கூட்டுறவு கல்வி மையம் அமைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கவில்லை. சுமார் ₹6,000 கோடி வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஆவின் பால் கூட்டுறவு, இந்தியாவின் மிகப்பெரிய அரசு நடத்தும் கூட்டுறவுகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு மாநில உச்ச கூட்டுறவு வங்கி (TNSC வங்கி) 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4,523 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகிறது, இது லட்சகணக்கான விவசாயிகளுக்கு நிதி வசதிகளை வழங்குகிறது (TNSC வங்கியின் ஆண்டு அறிக்கை, 2023).

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த உடன் அன்றைய எங்கள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் விவசாயிகளின் கூட்டுறவு வாங்கி கடன்கள் அனைத்தும் சுமார் 7000 கோடி ருபாய் தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்றினார்.

ஆனால் உங்களுடைய ஒன்றிய மோடி அவர்களின் அரசு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவிப்பை நிதிநிலை அறிவிப்பில் இடம்பெறவில்லை.

இன்றைய எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வட்டியில்லா கடன் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலமாக இன்று வரை வழங்கிக் கொண்டு வருகிறார்.

எனவே, அரசாங்கம் உண்மையிலேயே கூட்டுறவு கல்வியை வளர்க்க விரும்பினால், குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை நம்பியிருக்க தமிழ்நாட்டை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது தமிழ்நாட்டில் உள்ள இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவும்.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, ஆசிரிய மற்றும் ஆராய்ச்சித் தலைமை, ஆராய்ச்சி முன்னுரிமைகளுக்கான முடிவெடுக்கும் செயல்முறை ஆகியவற்றில் தமிழ்நாடு மற்றும் பிற முக்கிய கூட்டுறவு சார்ந்த மாநிலங்களின் மாநில பிரதிநிதித்துவத்தை உத்தரவாதம் செய்ய மசோதா தவறிவிட்டது.

அதன் கொள்கைகள், பாடத்திட்டம் மற்றும் தலைமை ஒரு மாநிலத்தால் கட்டுப்படுத்தப்பட்டால் இது எப்படி ஒரு தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகமாக இருக்க முடியும்? தமிழ்நாட்டின் கூட்டுறவு பால்வளம், வங்கி மற்றும் மீன்வள மாதிரிகள் குஜராத்திலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. நமக்குத் தேவை உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள், ஒரே மாதிரியான குஜராத் மாதிரி அல்ல.

இந்த மசோதா, மாநில மற்றும் உள்ளூர் தலைமையின் கீழ் பாரம்பரியமாக செழித்து வளர்ந்த ஒரு துறையின் மீது, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கான மற்றொரு முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.

குஜராத்தின் IRMA வளாகத்தில் பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம், இந்த மசோதா தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஓரங்கட்டக்கூடும், இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க கூட்டுறவில் தடம் பதித்துள்ள மாநிலங்கள் ஆகும்.

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) தரவுகளின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறை வருவாயில் 30% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.

கூட்டுறவு கல்வியில் முன்னணியில் இருக்கும் ஏராளமான மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி மையங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்தின் அடிமட்ட உணர்வை நீண்டகாலமாக நிலைநிறுத்தி வரும் சிறப்பு நிறுவனங்களுக்கு இந்தியா தாயகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக,

கூட்டுறவு மேலாண்மை நிறுவனம், போபால் (மத்திய பிரதேசம்), கூட்டுறவு நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் தலைமைத்துவத்தில் விரிவான திட்டங்களை வழங்குகிறது.

திரிபுவன் சாகரி பல்கலைக்கழக மசோதாவின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று, -பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழக்கு தீர்ப்பு குறித்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு ஆகும். கிளாஸ் 41(3)-இன் படி, "வழக்கு தீர்ப்பு அமைப்பின் முடிவே இறுதியானது, மேலும் அதற்கு எதிராக எந்த சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி, ஊழியர்களுக்கு நீதி கேட்கும் உரிமையை கட்டுப்படுத்துகிறது, மேலும் இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளான அதிகாரம் 226 மற்றும் 32-ஐ மீறுகிறது. இந்த உரிமைகள், எந்தவொரு நபருக்கும் நீதிமன்றத்தில் நீதி கேட்கும் உரிமையை உறுதி செய்கின்றன.

மேலும், வழக்கு தீர்ப்பு அமைப்பில், ஒரு உறுப்பினர் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலால் நியமிக்கப்படுகிறார், மற்றொரு உறுப்பினர் ஊழியரால் நியமிக்கப்படுகிறார், மற்றும் மூன்றாவது உறுப்பினர் (சுயேச்சையான உறுப்பினர்) மீண்டும் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலால் நியமிக்கப்படுகிறார். இது, மசோதவின் நியாயத்தன்மையை குறைக்கிறது, ஏனெனில் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் அதிகாரிகள் வழக்கு தீர்ப்பு அமைப்பில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றனர்.

இந்த குறைபாடுகளை கருத்தில் கொண்டு, மசோதாவை மீண்டும் முறையாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஊழியர்களின் நீதி கேட்கும் உரிமை மற்றும் நியாயமான வழக்கு தீர்ப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், இந்த மசோதா மீண்டும் தயாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் அவர்களுக்கு ஒரு நினைவூட்டலை தெரிவிக்க விரும்புகிறேன்: குஜராத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களையும் கவனிக்க வேண்டும். நீங்கள் இந்தியாவின் பிரதமர், குஜராத்தின் முதல்வர் அல்ல. இந்த நாட்டின் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் நீங்கள் பொறுப்பானவர். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிரதமர் அவர்களே தமிழ்நாடு இந்தியாவிலேயே தாங்கி கொண்டுள்ளது, இந்திய வரைபடத்தில் மட்டுமல்ல நிதியிலும் தான்.

புதியதாக ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள், அது இந்தியாவிற்க்கே ஒரு முன்னுதாரணமாக இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக அமையும். கூட்டுறவே நாட்டு உயர்வு. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஒன்றிய அரசு தாய் பறவை போல் நடந்து கொள்ள வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP பேச்சு!