Tamilnadu

100 நாள் வேலைத் திட்ட பாக்கியை வட்டியோடு கொடுப்பீர்களா? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்த பதில்!

மக்களவையில் இன்றுகேள்வி நேரத்தின் போது தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, 100 நாள் வேலைத் திட்டம் பற்றிய கேள்வியை எழுப்பினார். அப்போது பேசிய அவர், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி (நூறு நாள் வேலை வாய்ப்பு) திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை, 15 நாட்கள் தாமதம் செய்தால் அதற்குண்டான வட்டியை சேர்த்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் விதி.

தமிழ்நாட்டில் உபகரணங்கள்- ஊதியம் என்ற வகையில சுமார் 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதுகுறித்து எங்கள் முதலமைச்சர் அவர்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியிள்ளார்.

நாங்களும் துறை அமைச்சரை சந்தித்து, இந்த நிதியை விரைந்து வழங்குமாறு வேண்டுகோள் வைத்தோம். நாங்கள் இன்னும் அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். எப்போது அந்த நிதியை விடுவிப்பீர்கள்? ஏற்கனவே ஐந்து மாதங்களாக பாக்கி இருக்கிறது. எனவே வட்டியும் சேர்த்து வழங்குவீர்களா?” என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசனி பதிலளிக்கையில், “இந்த திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் துவங்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் விதிகளின்படி 15 நாட்களுக்கு மேல் நிதி நிலுவையில் வைக்கப்பட்டிருந்தால் 16 ஆம் நாளில் இருந்து 0.05% வட்டி வழங்கப்பட வேண்டும். மேலும் நிதி தாமதமானால், முதலில் மாநில அரசு தொகையை செலுத்திட வேண்டும், பிறகு அதை ஒன்றிய அரசு கொடுத்துவிடும் என்பதுதான் விதிகளில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி. உத்திரபிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி. உத்திரப்பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக நிதியை பெற்றிருக்கிறது. எனவே நிதி கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”30 புதிய பூங்காக்கள்” : சென்னை மாநகராட்சிக்கான புதிய அறிவிப்புகள் என்ன?