Tamilnadu

தமிழ்நாடு சட்டப்பேரவை : MLA-க்கள் எழுப்பிய கேள்வி - ’நச்’ என்று பதில் அளித்த அமைச்சர்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, “தமிழ்நாட்டில் உள்ள 37,299 முழு மற்றும் பகுதி நேர நியாய விலை கடைகளில் அனைத்து கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணும் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும்” என அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார்.

அதேபோல் அமைச்சர் பெரிய கருப்பன்,”திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதுவரை 3,000 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 34,902 நியாய விலை கடைகள் அனைத்தும் அரசின் சொந்த கட்டிடத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ. 12 லட்சம் செலவில் பேராவூரணி தொகுதி கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாய விலை கடைக்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும்." என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கே.என்.நேரு, ”சென்னை மாநகராட்சிக்கு புதிய திருமண மண்டபங்கள் கட்டவும், பழமையான திருமண மண்டபங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் 2004-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய திருமண மண்டபத்தை இடித்துவிட்டு, புதிய திருமண மண்டபம் கட்டித் தரப்படும்.

மதுரை திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும். புதுப்பிக்கப்பட்ட ராஜபாளையம் பேருந்து நிலையம் இன்னும் 10 நாட்களுக்குள் உடனடியாக திறந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்" என பதிலளித்தார்.

Also Read: ”Fair Delimitation பேசு பொருளாக இருக்க காரணம் இதுதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!