Tamilnadu

ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன? : கனிமொழி MP கேள்வி!

“ஒன்றிய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு?, இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் என்ன?, பிரவாசி கௌஷல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு?” ஆகிய கேள்விகளை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்டார்.

இக்கேள்விகளுக்கு ஒன்றிய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறையின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜெயந்த் சௌத்ரி அளித்த பதிலில் வருமாறு:-

“ஒன்றிய அரசின்,‘திறன் இந்தியா மிஷன்’ என்ற திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE), திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும், மறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும், உயர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குகிறது.

இதற்காக பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY), ஜன் சிக்ஷான் சன்ஸ்தான் (JSS), தேசிய தொழில்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIs) மூலம் கைவினைஞர் பயிற்சி திட்டம் (CTS) என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும். இந்த திட்டங்களின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் இளைஞர்கள் எதிர்காலத்தில் தொழில்துறைக்கு ஏற்ற திறன்களுடன் தயாராவதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட 2015 முதல் கடந்த 2024 வரை தமிழ்நாட்டில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 443 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 870 பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

ஜன் சிக்‌ஷான் சன்ஸ்தான் திட்டத்தின் கீழ் 2018 முதல் 2025 பிப்ரவரி வரை தமிழ்நாட்டில் 87 ஆயிரத்து 449 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எவருமில்லை.

தேசிய தொழில் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 2018-19 முதல் பிப்ரவரி 2025 வரை தமிழ்நாட்டில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 439 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1157 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITI) வழியாக தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 15 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 17 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறையின் திட்டங்களில், 2015-16 முதல் 2021-22 வரை செயல்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் முதல் மூன்று பயிற்சித் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டது.

அதன்படி நாடு முழுதும் 24 லட்சத்து 43 ஆயிரத்து 672 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் இந்த பயிற்சிகளின் மூலமாக 1 லட்தது 72 ஆயிரத்து 336 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 182 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

PMKVY 4.0 இன் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மாறுபட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வெளியுறவுத்துரை அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரவாசி கௌஷல் விகாஸ் யோஜனா (PKVY), வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை எளிதாக்குவதற்காக, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2018 இல் தொடங்கப்பட்டதிலிருந்து பிரவாசி கௌஷல் விகாஸ் யோஜனா (PKVY) இன் கீழ், வெளிநாடு செல்வதற்கு முந்தைய ஓரியண்டேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி நாடு முழுதும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 381 பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரத்து 328 பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்”

இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Also Read: KV பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியரே கிடையாது... NEP-யை பின்பற்றாத KV பள்ளிகள் - அம்பலமான உண்மை !