Tamilnadu

PM கிராம சாலை மேம்பாட்டு திட்ட வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யவேண்டும் : கனிமொழி MP கோரிக்கை !

நேற்று நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் கழக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் முக்கிய திருத்தம் செய்ய வேண்டிய தேவையை சுட்டிக்காட்டினார்.

இது குறித்துப் பேசிய அவர், "பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, (PMGSY-III) இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கிராம சாலைகள் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாலை வசதி ஏற்கனவே பெருமளவு சிறப்பாக இருக்கும் நிலையில்... 'last mile connectivity' எனப்படும் கடைசி துண்டு சாலைகள் இணைப்பே முக்கிய தேவையாக உள்ளது. அதாவது இரண்டு அல்லது ஒன்றரை கிலோ மீட்டர்களுக்கு உள்ளான சாலை அமைப்பதுதான் தேவையாக இருக்கிறது.

ஆனால் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் இதை அனுமதிப்பதில்லை. தற்போது தனி-தனி கோரிக்கைகளின் அடிப்படையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு குறைவான சாலைகள் அனுமதிக்கபட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டுக்கென 20 சாலைகள் மட்டுமே இதுவரை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் 36 ஆவது அறிக்கையிலே, கிராம சாலைகளுக்கான குறைந்தபட்ச அளவுகோலை 5 கிலோமீட்டர் என்பதிலிருந்து 2 கிலோமீட்டர் என்பதாக குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இந்த பரிந்துரையை இன்னும் ஏற்கவில்லை.

எனவே பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பயன்பெறும் வகையில் கிராம சாலைகளின் குறைந்தபட்ச நீளம் 1.5 கிலோ மீட்டர் என்பதாக நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தினார்.

Also Read: தேசிய தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் அதிகம்- திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்!