Tamilnadu
“இது நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்” - ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, துணை முதலமைச்சர் கண்டனம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று அவமதித்து பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது கருத்தை தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.
இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நம்மை பார்த்து நாகரிகமில்லாதவர்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.
திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார்.
டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்!
தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்.
கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?