Tamilnadu
சீமான் மீதான பாலியல் புகார்: நோட்டீஸை கிழித்த நாதக நிர்வாகி... காவலாளியிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அதனடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சீமான் வற்புறுத்தலினால் 6-7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும், விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதோடு, திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த விவகாரம் அண்மையில் பூதாகரமான நிலையில், அவரை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அனைத்து நோட்டீஸ்களையும் சீமான் புறக்கணித்துள்ளார். மேலும் இன்று சீமான் ஆஜராக வேண்டிய நிலையில், ஆஜராகாமல் இருந்ததால், இனியும் விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை என்றால், அவரை கைது செய்ய நேரிடும் என்று சீமான் வீட்டின் வாசலில் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
சீமானுக்கு சொந்தமான நீலாங்கரை இல்லத்தில் போலீசார் சார்பில் விசாரணைக்கு நாளை காலை 11 மணியளவில் காவல் நிலையத்திற்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில், அதனை போலீசார் முன்னிலையிலேயே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நாதக நிர்வாகியை போலீசார் இழுத்து செல்ல முயன்றபோதும், சீமானின் மனைவி கயல்விழியிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் முயன்றபோது அவர்கள் மீது காவலாளி அமல்ராஜ் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து காவலாளியை போலீசார் உடனடியாக கைது செய்த நிலையில், அவரிடம் இருந்து கை துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவலாளி அமல்ராஜை போலீசார் கைது செய்ய முயன்றபோது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி காண்பித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 20 குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் ஒட்டப்பட்ட சம்மனை சீமானின் மனைவி கயல்விழி கூறியதன்பேரிலே, நாதக நிர்வாகி கிழித்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!