Tamilnadu

DD தமிழில் இந்தியில் சமையல் நிகழ்ச்சி... தமிழ்நாட்டை இந்திமயமாக்கத் துடிக்கும் பாஜக அரசு!

இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. பொதிகை என்ற பெயரில் தமிழில் சேவைகளை வழங்கி வந்த தூர்தர்ஷனின் பெயர், பாஜக ஆட்சிக்கு வந்ததும் 'DD தமிழ்' என மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் DD News லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியது. இதற்கு மாநிலம் முழுவதும் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்கள் எழுந்தது.

இந்த சூழலில் அண்மையில் மும்மொழிக் கொள்கை, குலக்கல்வி முறை, கலை கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு, சிறு பிள்ளைகளுக்கும் பொதுத் தேர்வு என்று பல கேடான விஷயங்களை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி கொடுக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு வெளிப்படையாக மிரட்டியது.

எனினும் அதனை ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், பழிவாங்கும் நோக்கோடு, தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரம் கோடி கல்வி நிதியை, பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இந்த சூழலில் தற்போது ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழநாடு முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்தி திணிப்புக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பெண்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இரயில் நிலையங்களில் உள்ள இந்தி பெயரும் அழித்து மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சிறு சிறு விஷயங்கள் வழியாக இந்தியை மறைமுகமாக திணித்து வந்த ஒன்றிய அரசு, தற்போது நேரடியாக திணித்து வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசின் DD தமிழ் தொலைக்காட்சியில் இந்தியில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது. அதாவது DD தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே பேசுகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.

Also Read: இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமா? : இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை காட்ட தொடங்கிய BJP முதல்வர்!