Tamilnadu

2,642 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கவுள்ளார் முதலமைச்சர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில், 1127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடமாறுதல் ஆணையினை வழங்கினார்கள்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு, தொடர்ச்சியாக பணி நியமனங்களாக இருந்தாலும், பணி மாறுதல்களாக இருந்தாலும் அல்லது பதவி உயர்வுகளாக இருந்தாலும் வெளிப்படைத்தன்மையோடு, ஒளிவு மறைவற்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிற அனைவருமே நன்கு அறிவார்கள்.

அந்த வகையில் தொடர்ச்சியாக இந்த பணி நியமனங்களும், பணிமாறுதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,021 மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணி ஆணைகள் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற சுகாதார மாவட்டங்கள் 20 இல் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த 20 மாவட்டங்களுக்கு இந்த 1,021 மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்ற நிலைக்கு அன்றைய சூழ்நிலை நிலவியது. அந்த வகையில் மருத்துவர்களுக்கு இந்தியாவில் முதன் முறையாக தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு கவுன்சிலிங் என்பது கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதன்முதலில் பணியில் சேர்வோருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஏற்கனவே 1,021 மருத்துவர்களுக்கும், 900க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்களுக்கும், 1000 செவிலியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணி ஆணைகள் தரப்பட்டது.

அந்த வகையில் மருத்துவர்கள் ஆகிய இந்த 1,021 பேருக்கு பணி ஆணைகள் தரப்பட்ட போது சொந்த ஊர்களுக்கு கிடைக்கின்ற அந்த வாய்ப்பு என்பது சற்று குறைவு. காரணம் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருக்கிற 20 மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு தரப்பட்டதால் கொஞ்சம் அதில் நிறை, குறைகள் காணப்பட்டது. அந்தவகையில் அப்போது அனைத்து மருத்துவர்களிடத்திலும் சொன்னது ஓராண்டு காலம் நீங்கள் கிடைத்திருக்கிற வாய்ப்பை எந்தெந்த மருத்துவமனையில் விரும்பி எடுத்தீர்களோ, அங்கே பணியாற்றிக் கொண்டிருங்கள். ஓராண்டு கழித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கலந்தாய்வு நடத்தி பணிமாறுதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மிகப்பொருமையாக, மிக சிறப்பாக இந்த 1,021 மருத்துவர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றினார்கள். ஓராண்டு நிறைவுபெற்றிருக்கிற காரணத்தினாலும், புதிய மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிற காரணத்தினாலும் இன்றைக்கு கடந்த 3 நாட்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு 1,127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. இந்த 1,127 பேரில் 893 மருத்துவர்களுக்கு அவரவர் விரும்பி கேட்ட இடங்களுக்கே கிடைத்திருக்கிறது. இப்போது மேடைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடத்தில் நானும் நம்முடைய துறையின் செயலாளரும் நீங்கள் எந்த ஊர், எந்த ஊருக்கு கிடைத்திருக்கிறது என கேட்டபோது எல்லோருமே சொந்த ஊருக்கே கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொன்னதை இங்கே நினைவு கூறுகிறோம், குறிப்பாக ஒரு மருத்துவர் நான் சேலம் ஆத்தூரை சேர்ந்தவர், ஆனால் நான் வேலை செய்து கொண்டிருந்த இடம் கொடைக்கானல். இப்போது கொடைக்கானலில் இருந்து ஆத்தூருக்கே வந்துவிட்டேன் என்று சொந்த ஊருக்கே வந்த மகிழ்ச்சியை இங்கே எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

இப்படி எல்லா மருத்துவர்களுக்கும் 893 பேருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது இந்த துறையில் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அந்த வகையில் இன்றைக்கு இந்த 1,127 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையோடு ஒளிவு மறைவற்ற முறையில் பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

இந்த அரசுப் பொறுப்பேற்றபிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இதுவரை 12,290 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் பெற்றிருக்கிறார்கள். செவிலியர்கள் 6,818 பேர், மருந்தாளுநர்கள் 1302 பேர், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 18,953 பேர் மற்றும் இன்று பணி ஆணைகள் பெற்றவர்கள் என ஆக மொத்தம் 40,490 பேருக்கு 4 ஆண்டுகளில் கலந்தாய்வு மூலம் பணி ஆணைகள் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள்.

மருத்துவத்துறை வரலாற்றில் 40,000 பேர் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்கள் பெற்றிருப்பது இந்தக் காலக்கட்டத்தில் மட்டும்தான் என்பது சிறப்புக்குரிய ஒன்று. அதோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, புதிய பணிநியமனங்களைப் பொறுத்தவரை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமும், தேசிய நலவாழ்வு குழுமம் (NHM) மூலமாகவும், மாவட்ட சுகாதார நலவாழ்வு குழுமம் (District Health Society) மூலமாகவும் 23,598 மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என புதிதாக பணிஆணைகள் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது புதிதாக 4615 பேருக்கு அதாவது மருந்தாளுநர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 4615 பேர் மிக விரைவில் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான ஒரு செய்தி, நீண்டகாலமாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் வெற்றியாக கடந்த 05.01.2025 அன்று 2553 மருத்துவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 24000 மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 4585 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அதன்பிறகு கூடுதலாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் 89 சேர்த்து 2642 மருத்துவர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் மருத்துவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

26.02.2025 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திரா கன்வன்சன் சென்டரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2642 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை தரும் விழா மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் இல்லை என்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு பயின்ற மருத்துவர்களுக்கு DMS, DME போன்ற துறைகளுக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இன்றைய நிகழ்ச்சி ஒரே நாளில் 1127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வு, சாதனை நிகழ்வு ஆகும்"என்று கூறினார்.

Also Read: தலைமைத் தேர்தல் ஆணையரை பண்பற்ற முறையில் நியமனம் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு - முரசொலி விமர்சனம் !