Tamilnadu

உடல் உறுப்பு தானம் : “தமிழ்நாடு தான் ஒன்றிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது” - அமைச்சர் மா.சு!

சென்னை இராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளையின் 32 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றி, சிறுநீரக மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார், இதில் அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் ஜார்ஜி ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் பேசியதாவது, “பல தொண்டு நிறுவனம் விளம்பரத்திற்காகதான் செயல்பட்டு வருகின்றன. 1996-ம் ஆண்டு நான் சைதாப்பேட்டை மண்டல குழுத் தலைவராக இருக்கும்போது விடுதலை நாள் விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுதந்திரக்கூடிய ஏற்றினார்.

அப்பொழுது மேடையில் அவர் பல தொண்டுகளை செய்ததாக கூறினார். நான் தலைமை ஆசிரியரிடம் அவர் என்ன தொண்டு செய்தார்? என்று கேட்ட பொழுது, இன்று பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மிட்டாய் வாங்கி கொடுத்தார் என்று கூறினார்.

பிறகு நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, கடற்கரை தூய்மை செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தொழிலதிபர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்ட குடிநீர் வசதியை கொண்டு வந்ததாக கூறி என்னிடம் பேசினார். அப்பொழுது அந்த திட்டம் எந்த பள்ளியிலும் கொண்டுவரவில்லை என்று கூறியவுடன் அவர் முகம் எல்லாம் வேர்த்துப் போய்விட்டது. இப்படி விளம்பரத்திற்காக தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் மத்தியில் 32 ஆண்டுகளாக மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது இந்த தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை.

மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கும் போது முதலமைச்சர், 1 கோடி பயனாளிக்கு இந்த திட்டத்தின் தொகுப்பினை வழங்குவேன் என்றார். தற்போது இந்த திட்டத்தின் 2 கோடி பயனாளிக்கு மருத்துவ தொகுப்பினை அண்மையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு முதலமைச்சர் வழங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருதினை வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் மருத்துவ சேவையில் ஐ.நா-விடம் இருந்து இத்தகைய விருதை பெற்றுள்ளது.

அரசு சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் என யாராக இருந்தாலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டாக வழங்கப்படுகிறது. இவ்வாறு இதுவரை ரூ.282 கோடி திட்டத்திற்கு வழங்கப்பட்டு 3.20 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

பாதம் பாதுகாப்போம், இதயம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களும் செயல்பாட்டில் உள்ள, இதயம் பாதுகாப்போம் திட்டம் என்பது மலைவாழ், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக உயிர் காகும் நேரமாக கருதப்படும் நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அவர்களுக்கு தேவையான 3 மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது, இதன் இதுவரை 13 ஆயிரம் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

சிறுநீரகம் பாதுகாப்போம் என்ற திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 89,76 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 34,194 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு இதுபோன்ற பணிகளை செய்து கொண்டு வந்தாலும் அரசு உதவியாக தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்கள் மக்கள் பணி செய்து கொண்டு வருவது பாராட்டக்கூடிய ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள 568 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதிகப்படியான எண்ணிக்கையில் டயாலிசிஸ் சிகிச்சையும் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தான். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முளைச்சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததன் பெயரில் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வதில் குறித்தான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதைப் பார்த்து பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நம் மாநிலத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பிறகு இதுவரை உடல் உறுப்புகளை தானம் செய்த 304 பேருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்பது 2007 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் ஆட்சியில் போடப்பட்ட விதை, 2008 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் மகன் ஹிகேந்திரன் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது, அதுதான் உடல் உறுப்பு தானத்திற்கான தொடக்கப்பள்ளி.

அன்றிலிருந்து இன்று வரை மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பிறருக்கு பயன்படுத்தப்பட்டு வருவதில் தமிழ்நாடு தான் ஒன்றிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1500 மேற்பட்டோருக்கு உறுப்புகள் திசுக்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

Also Read: 160 அடியில்... மருதமலையில் வருகிறது ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை... - அமைச்சர் சேகர்பாபு !