Tamilnadu

உயிரிழப்புகளை தடுக்கும் 'இதயம் காப்போம்' திட்டம் : தமிழ்நாடு அரசுக்கு The Hindu நாளேடு பாராட்டு!

தமிழ்நாடு அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் இதயம் காப்போம் திட்டம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது. எனவே தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகும். இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் மாரடைப்பை தடுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மாரடைப்புடன் வருபவர்களுக்கு அதனை தடுக்கும் வகையில் ஆஸ்பிரின் 150 எம்ஜி – 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்ஜி – 4 மாத்திரைகள், அடோர்வாஸ்டாடின் 10 எம்ஜி – 8 மாத்திரைகள் என மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையின் தனது மாத இதழில் வெளியிட்டுள்ளதையும் தி இந்து நாளிதழ் மேற்கொள் காட்டி உள்ளது.

அதன்படி, தீவிர நெஞ்சுவலி, மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்த 6 ஆயிரத்து 493 நோயாளிகளில், 97 புள்ளி 7 சதவீதம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2புள்ளி 2 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்துள்ளது இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாகவும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் மூலம் இதய நோய் பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதும் அதிகரித்து காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடியே 70 லட்சம் பேர் இருதய நோயினால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதம் ஆகும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு திருவுருவச் சிலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!