Tamilnadu

ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி... சுக்கு நூறாகிய பொய்கள்... அமைச்சர்கள் புகழாரம்!

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இன்று (ஜன.23) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு முடிவுகளோடு அறிவித்தார். இதன் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

இந்த வரலாற்று அறிவிப்பை வெளியிடப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்புக்கு காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

தமிழுக்கு என்ன வரலாறு இருக்கிறது என ஏளனம் பேசினார்கள், ஆரியமும் வடமொழியும்தான் உலகுக்கெல்லாம் மூத்தவை என கொக்கரித்தார்கள். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்கலாமா? வரலாறு இருக்கிறதா என்று கேட்டார்கள்?

ஆதிக்கப் பேச்சுகளுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு அகழ்வாய்வு மூலமும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது தமிழ்நாடு. கீழடி, தமிழ் நகர நாகரிகத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது.

இன்று இரும்பின் பயன்பாடு 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலப்பரப்பில் இருந்ததை உலகுக்கு அறிவித்து தமிழ் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றுக்கே ஒரு திருப்புமுனையை காட்டியிருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

இந்த மகத்தான கண்டுபிடிப்பானது தமிழை இருட்டடிப்பு செய்த ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க இருக்கிறது. தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் உணர்வுப்பணியை செய்துவரும் திராவிட மாடல் அரசின் கொள்கை முனைப்பிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி இது.

உலக நாகரீகத்தின் தனித்துவ தொட்டிலான தமிழ் நிலத்தில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியதென அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து நிரூபித்து, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மண்ணிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

இதுகுறித்து அமைச்சர்கள் ரகுபதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார். தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.

Also Read: “இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும்” : முதலமைச்சரின் அறிவிப்பை வழிமொழிந்த கனிமொழி எம்பி!