Tamilnadu
அவதூறு பேச்சு... சீமானுக்கு எதிராக குவியும் கண்டனம்... வீட்டை நோக்கி முற்றுகையிட்டு போராட்டம்!
தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை ஒரு சிலர் பார்த்தாலும், சீமானால் அது மேலும் பாழாகி வருகிறது. சீமான் தனது நாவை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கையை மீறியும் செயல்பட்டு வருகிறார். இதுவும் போக வாயை திறந்தாலே பொய் என்று பலரும் விமர்சித்தும் வருகின்றனர். இதற்கு அக்கட்சியினரே பலரும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அண்மையில் பெரியாரை அவமரியாதையாகவும் அவதூறாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி சர்ச்சையில் சிக்கினார். பெரியார் குறித்து சீமானின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையிலும், தனது நாவை அடக்கமால் மேலும் அவதூறாக பேசி வந்தார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சீமானின் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சீமானுக்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கண்டனங்கள் எழுந்தது. மேலும் பெரியார் குறித்த சீமானின் பேச்சு, அவரை சார்ந்தது என்றும், கட்சிக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்றும் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் பாண்டியன் அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து சீமானின் பேச்சால், நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும் பெரியார் குறித்த பேச்சுக்கு சீமான் இதுவரை வருத்தமும் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை.
இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும், சீமானின் உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
தந்தை பெரியாரைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்புகளை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது சீமான், ஆர்.எஸ்.எஸ். உடை அணிந்து கையில் தாமரை சின்னத்தை வைத்திருப்பது போன்ற பதாகைகளை ஏந்தி துடைப்பத்தால் அடித்தும், சீமானின் உருவ பொம்மையை எரித்தும், சீமான் உருவம் பொறித்த பேனரை துடைப்பத்தாலும் செருப்பாலும் அடித்தும், ஒப்பாரி வைத்தும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி முற்றுகையிட பேரணியாக செல்ல முற்பட்ட பொழுது பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!