Tamilnadu

ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர் : வருமான வரித்துறை சோதனையில் அம்பலம் !

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு, என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது.

இவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அதன் கிளை நிறுவனங்கள், ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களின் வீடுகள் என 28 இடங்களில் சோதனை நடத்தினர்.

5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனைகளில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனைகளில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சீமானின் கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு : கொத்து கொத்தாக விலகும் தொண்டர்கள் ! கட்சியில் பிளவா ?