Tamilnadu
”செய்தியாளர்களை அழைத்து வித்தை காண்பித்து கொண்டு இருக்கிறார் அண்ணாமலை” : அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்!
”பாஜக தலைவரோ செய்தியாளர்களை அழைத்து வித்தை காண்பித்து கொண்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு வித்தை காண்பிப்பது போல கயிறால் அடித்து கொண்டு செய்தியாளர்களுக்கு வித்தை காண்பித்து இருக்கிறார்” என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன்,” கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள்; ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால்தான், குற்றச் செயல்கள் நிகழாத வகையிலான நிலையை உருவாக்கித் தர முடியும்.
நமது முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின், 27.11.2021 அன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து சமூக நலத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஒரு சிறப்பு கூட்டம் நடத்தினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும், குற்றச்செயல்கள் நடைபெற்று புகார் அளிக்குபோது அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
பெற்றோர் தயங்கும் நேரத்தில் சமூக நலத்துறையே முன்வந்து புகார் கொடுத்து வழக்கையே சமூக நலத்துறை நடத்திட வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்; அதற்கு ஏற்றார் போல் சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை செயல்பட வேண்டுமு் எனவும் அறிவுறுத்தினார். அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் கவனிக்கப்படுகிறதா எனவும், குற்றம் நடந்திருப்பின் முதல் தகவல் அறிக்கை முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைந்துள்ளதா எனவும் முதலமைச்சர் அவர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பெண்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் நினைத்தார். அதனால் தான் மகளிர் விடியல் பயணம், மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பெண்களை தொழில் முனைவர் ஆகும் திட்டம், கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு பெண்கள் பெயரிலேயே பட்டா வழங்குவது, மகளிர் கடன் உதவி, மானிய கடன் வழங்குவது, சுழல்நிதி வழங்குவது, தொழில் தொடங்குவது என பெண்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
அப்படியொரு ஆட்சியை நடத்தும் இந்த அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புறம்தள்ளுமா என்ற கேள்வியை நான் இங்கு முன் வைக்கிறேன். ஒரு சில வழக்குகளில் நிலவும் சூழல் அல்லது காவல் அதிகாரியின் கவன குறைவாலோ ஒரு தவறு நடந்தால் கூட அரசின் கவனத்திற்கு வரும்போது அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சொல்லி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நம்முடைய வளர் இளம் பெண்களுக்கு போக்சோ சட்டத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனத் தெரியாமல் இருந்தது. இது குறித்து விழிப்புணர்வை, கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல்துறை இணைந்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். இதனால் அவர்கள் தைரியமாக புகார் அளிக்க முடிகிறது. மேலும் புகார் கொடுக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இதன் காரணமாகத் தான், தாயாக இருந்தாலும் தங்களின் குழந்தைகளுக்கு நடந்ததை கூறி புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் எத்தனையோ குற்றச்செயல்கள் நடைபெற்றது. பொள்ளாச்சி குற்றநிகழ்வு ஒன்றே அந்த பொல்லாத ஆட்சிக்கு சான்று. வழக்கே தொடுக்கவில்லை, புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்திய பின்னர் தான் மத்திய புலன் விசாரணை நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகளே அந்த வழக்கில் சமந்தப்பட்டு இருந்தார்கள், கட்சிக்காரர்களை பாதுகாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. ஆனால் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை வழக்கில் 3 மணி நேரத்தில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யபட்டார், இனி அவருக்கு தகுந்த தண்டனை வாங்கி தரப்படும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடுமில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்த அதிமுகவும், பாஜகவும் இந்த ஒரு வழக்கு கிடைத்ததும் அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
தூத்துக்குடி தூப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்க்கேடு, அப்படி நிர்வாகம் செய்தவர் எல்லாம் நம்முடைய தளபதியின் ஆட்சியை கேள்வி கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை கூற நேரம் போதாது அப்படி ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
பாஜக தலைவரோ செய்தியாளர்களை அழைத்து வித்தை காண்பித்து கொண்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு வித்தை காண்பிப்பது போல கயிறால் அடித்து கொண்டு செய்தியாளர்களுக்கு வித்தை காண்பித்தார்.
குற்றச்செயல் செய்த ஞானசேரன் திமுக என கூறுகின்றனர். ஆனால் அவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. சைதை பகுதி கழகத்தில் பொறுப்பில் இருப்பவர் டி.ஞானசேகர். அவர் வேறு என நாங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டோம்.
அதிமுக ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்கள் சிலவற்றை கூறுகிறேன்.
சென்னை போரூரில் 2017ல், 6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
மாமல்லபுரம் அருகே ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை இருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை.
காஞ்சிபுரத்தில் அணைக்கட்டில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.
தூத்துக்குடியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை. இப்படி அடுக்கிக்கொண்டே போலாம். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் உடனடியாக அனைத்து வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி, கடந்த, 24-ம் தேதி நடந்த நிகழ்வுக்கு 27-ம் தேதி நான்கு மணிக்கு பேசுகிறார். அத்தனை விளக்கங்களும் கொடுத்த பிறகும் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!