Tamilnadu
“மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதி தருவதாக கூறுகிறது ஒன்றிய அரசு” - அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்று சிங்கப்பூருக்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ள 42 மாணவர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பொது நூலகத் இயக்ககம் சார்பாக திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு ஓவிய கண்காட்சியையும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 (பேரறிவுச் சிலை - Statue of Wisdom) என்ற கருப்பொருளை மையமாக வைத்து இன்று முதல் 31 ஆம் தேதி வரை திருக்குறளுக்கு ஏற்ப ஒவியங்கள் வரையப்பட்டு அது ஓவியக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அதன் துவக்கம் மற்றும் கருத்தரங்கம் மற்றும் பரிசுப்போட்டிகள், வினாடி - வினா, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
இன்று முதல் கோட்டூர்புரம் நூலகம் நுழைவாயில் அருகே திருக்குறள் புத்தகங்கள் மற்றும் திருக்குறள் புத்தகத்தை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று ஓவிய கண்காட்சியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஸே் பொய்யாமொழி தொடங்கி வைத்து ஓவிய கண்காட்சியை பார்வையிட்டார்.
முன்னதாக சிங்கப்பூர் செல்ல உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,
சிங்கப்பூர் செல்லும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். இன்று உங்கள் குழந்தைகளை எப்படி அனுப்பி உள்ளீர்களோ, அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வரும் போதும் அப்படியே வருவார்கள். அடுத்த 3 நாட்களுக்கு நான்தான் அவர்களுக்கு அம்மா, அப்பா. இப்படி மாணாக்கர்களை சுற்றுலா அழைத்து செல்லும்போது, அது மற்ற மாணாக்கர்களுக்கும் ஊக்கம் கொடுக்க கூடியதாக இருக்கும்.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. வள்ளுவரை நாம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களை வெளிநாடு அழைத்து செல்வது என்பது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 100 மாணவர்களின் முதற்கட்டமாக 42 பேரை சிங்கப்பூர் அழைத்து செல்கிறோம். மீதம் உள்ளவர்களை ஜனவரி மாதம் மலேசியாவிற்கு அழைத்து செல்ல உள்ளோம். நானும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் செல்கிறோம்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதெல்லாம் மற்ற மாவட்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். மேலும் மாணவர்களுக்கும் இது ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.
கல்விக்கான நிதியை பற்றி பேச மட்டும் ஒன்றிய அரசு பேச மறுக்கிறது. ஒன்றரை கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது என கூறியதற்கு நேற்றே நான் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். அது சம்பந்தமான அதிகாரிகளிடம் பேசும்போது அதுபோல் இல்லை என தெரிவித்தனர். யாரோ இது போல அரைகுறையாக தெரிவிக்கும்போது அதனை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் சும்மா விட்டு விடுவார்களா உடனே பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்களா? சம்பளத்திற்கும் இன்டர்நெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்டர்நெட் நிலுவைத் தொகையை நிலுவை வைப்பதற்கான அவசியம் இல்லை.
ஒரு அரசாங்கம் இதை போய் நிலுவையில் வைக்குமா? நிலுவை இருக்கிறது என்றால் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய 2 ஆயிரத்து 151 கோடி நிலுவையில் உள்ளது. அதே சார்ந்து யாரும் பேச மறுக்கிறார்கள். இது குறித்து எந்த தலைவர்களும் பேச மறுக்கிறார்கள்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. 32,000 ஆசிரியர்கள் வாழ்வாதாரம் சார்ந்து இருக்கக்கூடியது. எவ்வளவு நிதி நெருக்கடி கொடுத்தாலும் ஒன்றிய அரசு நிதி நெருக்கடி கொடுத்தாலும் கல்வித்துறைக்கு தொடர்ந்து முதலமைச்சர் நிதியை கொடுத்து வருகிறார்.
எங்கள் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று கேட்கும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், அடுத்த அரை மணி நேரத்தில் நிதி கொடுக்கிறோம் என்று ஒன்றிய அரசு சொல்வது எந்த மாதிரியான மனப்பான்மை கொண்டதாக இருக்கும்?
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பேசும்போது, தானும் இந்தி அல்லாத பிற மொழி மாநிலத்தை சேர்ந்தவர்தான் என்றும், நீங்களும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். எங்கள் மாணவர்களின் திறமைகளை எடுத்துரைத்தும் இப்படி பேசுவது என்ன அர்த்தம்?
உலகம் முழுவதும் எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் செல்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் எங்கள் மாணவர்கள் படிக்கிறார்கள். அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். கடந்த கூட்டத்தொடரில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டோம். ரோபோடிக் வகுப்புகளை கொண்டு வர உள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு கொண்டு வர விரும்புகிறோம். பணத்தை குறைக்கும்போது அதை அனைத்து மாவட்டத்திலும் கொண்டு போக முடியாது.
தமிழ்நாட்டில் இருந்து வரியாக ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், 29 பைசாதான் நமக்கு வருகிறது. அந்த பணம் நமக்கு அதிகமாக வந்தால் நாம் ஒன்றிய அரசை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரும்போது நமக்கு தேவை என்ன என்பது குறித்து நாம் முடிவு செய்து கொள்ளலாம். நாம் நமது பிள்ளைகளை குறைத்து மதிப்பிட போகிறோமா? அவர்களின் அடுத்த கட்டத்திற்கு அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் கொண்டு செல்வோம். பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால் தமிழக பள்ளி கல்வி துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிக்கிறது" என்றார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!