Tamilnadu

“தமிழ்நாட்டின் மருத்துவத் திட்டத்தை, மற்ற மாநிலங்கள் நகல் எடுக்கின்றனர்” - அமைச்சர் மா.சு. பெருமிதம்!

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைகழகத்தில் மருந்தியல் துறையில் இன்றைய போக்குகள் என்னும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் 1500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "இந்த கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மருந்தியில் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதிய புதிய மருந்து கண்டுபிடிகள் அரிதான நோய்களை குணப்படுத்துகிறது, புதிய புதிய மருந்து கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

புதிய நோய் பாதிப்புகள் இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது. 200 நாடுகளுக்கும் மேல் இந்திய மருந்து 100 சதவீதம் போய் உள்ளது. இந்திய மருந்துகளின் தேவை அதிகரித்து உள்ளது. உலகத்திற்கு எடுத்துகாட்டாக மருந்து துறையில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் கூட பொது மருத்துவத்தின் 40% மருந்துகள் இந்தியாவில்தான் வாங்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டின் மருத்துவ திட்டத்தை நகல் எடுக்க தொடங்கி உள்ளனர். மற்ற நாடுகளிலும் தமிழ்நாட்டின் மருத்துவ முறையை முன்னெடுக்க முனைந்துள்ளார்கள். ஐ.நா.வில் தொற்றா நோய்க்கான சிறந்த மருந்தை கொடுக்கும் மாநிலம் என தமிழ்நாட்டை கண்டறிந்து விருது வழங்கப்பட்டது. இது உலகின் உச்சபட்ச விருது.

தொற்றா நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது, பெரிய உயிர் இழுப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் பார்மஸி கல்லூரி தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இன்று படித்த மாணவர்கள் உலகத்தில் சாதனை புரிந்து வலம் வருகின்றனர். அரசு கல்லூரிகளில் படித்த எனக்கு அரசுதான் வேலை தர வேண்டும் என மனப்போக்கு மாணவர்களிடையே உள்ளது. அது தவறில்லை. ஏராளமான தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளது. அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி,திறமையை கொண்டு படிப்பை முடித்த பின் அவர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். ஜனவரி 5 ஆம் தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது" என்றார்.

Also Read: “மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதி தருவதாக கூறுகிறது ஒன்றிய அரசு” - அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!