Tamilnadu

தங்க கடத்தலில் ஈடுபட்ட AIR INDIA விமான ஊழியர் : சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி ?

துபாயிலிருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த, கடத்தல் பயணி மற்றும் விமானத்தின் கேபின் ஃகுரூ ஆகிய இரண்டு பேரை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து விசாரணை.

துபாயிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாகவும், அந்த தங்கத்தை விமான ஊழியர் ஒருவரே எடுத்து வருவதாகவும், சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து, கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்து, தங்கத்தையும் பறிமுதல் செய்யும் படி அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், நேற்று அதிகாலை முதல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நேற்று ஞாயிறு அன்று அதிகாலை, 4.40 மணிக்கு, துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.

அதில் இறங்கி வந்த பயணிகளை சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் இறங்கி வெளியில் வந்தனர். பின்னர் சுங்கத்துறையினர் விமானத்தின் கேபின் ஃகுரூ எனப்படும் விமான ஊழியர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களில் 26 வயது ஆண் ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனி அறையில் முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது அந்த ஊழியர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 1.7கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தின்கேபின் ஃகுரூ ஊழியரை, கைது செய்து, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதோடு அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவலை, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தினர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையில் பயணி ஒருவர் இந்த தங்க கட்டிகளை, விமானத்தில் வைத்து,கேபின் ஃகுரூவிடம் கொடுத்ததாக தெரியவந்தது. இதை அடுத்து கேபின் ஃகுரூ , கொடுத்த தகவலின் பெயரில், குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த, அந்த கடத்தல் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

Also Read: “‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ - நாட்டின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் அழித்துவிடும்!” : முதலமைச்சர்!