Tamilnadu

“காலை உணவு திட்டத்தால் 21 லட்சம் குழந்தைகள் பயன்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி 140வது வட்ட கழகம் சார்பில் கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதியின் உதய நாள் விழா நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் மணிமுடி, இளம் பேச்சாளர் செசிலின் சந்தியா தீப்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்,

அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் மூலம் 21 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டத்தை பின்பற்றுகிறார்கள்.

மகளிர் உரிமை திட்டத்தை பற்றி ஆரம்பத்தில் பல பேர் ஏளனமாக பேசினார்கள். ஆனால் தற்போது ஒரு கோடி 15 லட்சத்துக்கு மேற்பட்ட மகளிர், அத்திட்டத்தின் வழி பயன்பெற்று வருகின்றனர்.

விடியல் பயணம் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்காக 300 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சைதாப்பேட்டை தொகுதியில் விரைவில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை செயல்படுத்த உள்ளோம். இதில் தையல் தொழில் கற்றுக் கொடுக்க உள்ளோம். இதன் வழி கூடுதலாக பல்வேறு வேலை வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வயது மூத்தவர்களுக்கான மருத்துவமனை சைதாப்பேட்டை தொகுதியில் தான் இருக்கிறது. அதில் இருக்கின்ற உபகரணங்கள் போல உலகத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் கிடையாது” என்றார்.

Also Read: இந்தியாவை ஒற்றைச் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி - 'ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை : முரசொலி கண்டனம்!