Tamilnadu

வைக்கத்தில் நினைவகம் - நம் பாதையை அடையாளம் காட்டிவிட்டார் முதலமைச்சர்: ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

வைக்கத்தில் நினைவகத்தை எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கும் போது, பூ மழை தூவி வானமே வாழ்த்தியது!

வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைவரும் நுழையும் உரிமைக்காகப் போராடி - 100 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போதும் மழை பெய்தது. மழையோடு புயலும் வீசியது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சில் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் சங்கிலிகளும் கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும் கழுத்தில் மரக்கட்டையும் மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு கேரளாவின் தீண்டாமைச் சாதிக்காரர்களது சுதந்திரத்துக் காக தமிழ்நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை, இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்கு புத்துயிர் தராதிருக்கவில்லை..." என்று கே.பி.கேசவமேனன் எழுதினாரே, அத்தகைய துன்பத்தைச் சிறையில் பட்ட பெரியார், ஒருசிறையில் இருந்து இன்னொரு சிறைக்குமாற்றப்படுகிறார்.

பெரியாரையும் இன்னொருவரையும் படகில் ஏற்றி இன்னொரு சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது நடந்ததை பெரியாரே சொல்கிறார்... “மழை நன்றாகப் பெய்கிறது. மழையுடன் காற்றும் பலமாக அடித்தது. படகு ஓட்டி மிகக் கெட்டிக்காரர். மிகவும் சாமர்த்தியமாக ஓட்டிச் சென்றார். இரவு வெகு நேரமாகி விட்டது. மழை பெய்து கொண்டிருந்ததால் என்னையும் எனது நண்பரையும் படகின் பலகையால் ஒரு முனையில் மூடப்பட்ட பாகத்தின் கீழ்ப் பகுதியில் உட்கார வைத்து விட்டார்கள். சிறிது நேரம் கழித்து திடீரென்று, ' அய்யய்யோ! படகு திசை திரும்பிச் செல்கிறதே' என்று படகுக்காரர் கத்தினார்.

“ஆபத்து வந்து விட்டது, நாம் பிழைக்க மாட்டோம், நீங்கள் எல்லோரும் உங்கள் சாமியை வேண்டிக் கொள்ளுங்கள்" என்று சொன்னார். நமக்குத் தான் கடவுள் நம்பிக்கை இல்லையே? யாரை வேண்டிக்கொள்வது? ஓகோ! நம் காலம் இத்தோடு முடியப் போகிறது என்று நான் நினைத்தேன். பின்னர் படகோட்டி, மிகமிக முயன்று அங்குமிங்குமாக வெளிச்சத்தைக் கண்டுபிடித்தார். அதை நோக்கி படகைச் செலுத்தினார். 'நமக்கு இனி ஆபத்து இல்லை' என்றார். கரைக்கு கொண்டு வந்துவிட்டார்.” என்று பிற்காலத்தில் விவரித்தார் பெரியார்.

வாழும் காலமெல்லாம் ஆபத்தான பாதையிலேயே தேர்ந்தெடுத்து பயணித்தவர் தான் பெரியார். இன்று ஆட்சிகள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பின் பேரில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வருகை தந்திருந்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகனும் வருகைதந்திருந்தார்.

வைக்கம் கோவில் சாலைகள் முழுக்க கருப்புச் சட்டைகளும், கேரளத்து சிவப்புத் தோழர்களும் நிறைந்து காட்சியளித்தார்கள். 'எந்த ஊரில் பெரியாருக்கு எதிராக யாகம் வளர்த்தார்களோ, அதே ஊரில் அவருக்கு புகழ் மாலை சூட்டிக் கொண்டிருக்கிறோம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிய சொல்லுக்குள் நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. 'வைக்கம்' என்பது உணர்வில் கலந்த சொல்லாக இருந்ததால் உணர்ச்சிமயமாக இருந்தது திறப்பு விழா!

இந்த நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்வதாக அமைந்திருக்கிறது அந்த நினைவகம். எங்கே இருக்கிறது வைக்கம்? எங்கே இருக்கிறது திருவிதாங்கூர்? என்றெல்லாம் தெரியாமல் 'வைக்கம் சென்று போராடினார் பெரியார்' என்று சொல்லி வந்தோம். இப்போது உலகுக்குப் பெரியாரைச் சொல்கிறது 'வைக்கம்'. சொல்ல வைத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தந்தை பெரியாரின் போராட்டங்களில் மைய இழை என்பது ஜாதி ஒழிப்பு. மனித இழிவு நீக்கம் ஆகும். அதனைத் தொடங்கி வைத்த போராட்டமாம் 'வைக்கத்தில்' நினைவகம் அமைத்ததன் மூலமாக, 'நாம் செல்ல வேண்டிய பாதை எது?' என்பதை அடையாளம் காட்டி விட்டார் முதலமைச்சர்.

வைக்கம் நினைவகத்தைச் சுற்றிலும் வலம் வரும் போது தந்தை பெரியாரும் தெரிகிறார். பெரியாரின் புகழ்பாடும் முதலமைச்சரும் தெரிகிறார். வைக்கம் கோவில் வீதிகளில் கடை வைத்திருக்கும் சோமன் சொன்னார்: 'சார் நான் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவன், நான் இங்கே இப்போது கடை போட்டு தொழில் செய்கிறேன் என்றால் அதற்கு தந்தை பெரியார் தான் காரணம்' என்று சொன்னார்.

வைக்கத்துக்கு பெரியார் வந்து போனவரல்ல, இருந்து வென்றவர் என்பதற்கு சோமன்கள் சாட்சி. நடக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இன்று வாழ்கிறார் அந்தக் கடைக்காரர். கடைக்காரர் வடிவில் பெரியாரும் வாழ்கிறார்.

“தந்தை பெரியாருடைய பெரும் பணி ஒரு தனிமனிதனின் வரலாறு அல்ல, ஒரு சகாப்தம், ஒரு காலக் கட்டம், ஒரு திருப்பம்" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. பெரியாருடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றவர் அவர். 'அவரை சாமியாராகவும், அவரது வேகமான நடைக்குப் பின்னால் ஓடும் என்னை சிஷ்யனாகவும் நினைப்பார்கள்' என்றார் அண்ணா. அந்த ஒரு சகாப்தத்தை, ஒரு காலக்கட்டத்தை, ஒரே ஒரு திருப்பத்தைக் காண வேண்டுமா? வைக்கம் சென்று வாருங்கள்! அரசியலுக்கு எல்லாம் வருவதற்கு முன்னால், வியாபாரியாக மொத்தக் குத்தகை மண்டி நடத்தி வந்த பெரியார் அவர்கள் மலபாருக்கு வருகிறார்.

அப்போது அங்குள்ள குளத்தில் இறங்கி குளிப்பதற்கோ - குடிப்பதற்கோ தண்ணீரைத் தொடுகிறார். குளத்தில் இறங்கி தண்ணீரைத் தொட்ட காரணத்துக்காக குளம் தீட்டாகிவிட்டது என்றும், அதற்குப் புண்ணியாக வசனம் செய்ய வேண்டும் என்றும், அவ்வூர்க்காரர்களால் கூறப்பட்டு அதற்காக பத்து அணா தண்டனை போட்டார்கள். அதை வாங்கிக் கொண்டு வெளியேற்றி இருக்கிறார்கள். இதோ இன்று அவருக்காக ஒரு மாளிகையே அமைக்கப்பட்டுள்ளது.

எட்டுக் கோடி மதிப்பில் எழுந்துள்ளது மாளிகை. இது நூற்றாண்டின் சமூகநீதி வரலாற்றை, இரண்டு மாநில சீர்திருத்த வாதிகளின் சலியாத போராட்டத்தைச் சொல்கிறது. கம்பீரமான வரலாற்றைச் சொல்கிறது கட்டிடம். கலைநயத்தோடு கதை சொல்கிறது இந்தக் கட்டிடம். புகைப்படங்கள் மூலமாக சுவைபடச் செய்திகளை அறியலாம். தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மும்மொழி நூல்களைத் தாங்கியதாக இருக்கிறது நூலகம்.

'படி, படித்துவிட்டு உள்ளூரில் முன்னேற முடியாவிட்டால் ஏதாவது ஒரு ஊரில் போய் முன்னேறிவிடு" என்றார் பெரியார். எனவே, போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்காகவே நூலகத்தில் தனிப் பகுதியை அமைத்திருப்பது; பெரியார் சிந்தனைகளின் பயன்மிகு வடிவமாக இருக்கிறது.

சென்னையில் கலைஞர் உலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் பன்நோக்கு மருத்துவமனை என முதலமைச்சரின் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டிய அமைச்சர் எ.வ.வேலு இந்த வைக்கம் நினைவகத்தின் மூலமாக தனது சிறகை மாநில எல்லைகளைத் தாண்டி விரித்துவிட்டார்.

மனித உரிமைப் போராளிகள் சென்று பார்க்க வேண்டிய சிந்தனைக் களமாக அமைத்துக் கொடுத்துவிட்டார் அவர். வைக்கத்தை உலகம் முழுக்கக் கொண்டுசெலுத்தியதால், 'வைக்கம் கொண்டான்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைக்கலாம்!

'நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்டவேண்டியதே தவிர, செயல் செய்தவன் எதிர்பார்க்கக் கூடாது' என்றவர் பெரியார். மனித சமுதாயத்தின் நன்றியின் அடையாளமாக இதனைக் கட்டி எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

'அவர் அண்ணா வழியில், கலைஞர் வழியில் போனாலாவது பரவாயில்லை, பெரியார் வழியில் அல்லவா செல்கிறார்' என்று அர்ஜுன் சம்பத்துகள் சொல்வது நமக்குக் காதில் தேனாகப் பாய்கிறது. அவர்களுக்கு இதுதான் தேளாய்க் கொட்டுகிறது.

பெரியாருக்கு பெரிய ஆசைகள் இருந்தது இல்லை. '100 ஆண்டுகள் கழித்து ஈ.வெ.இராமசாமி என்ற ஒருவன் இருந்தான், இப்படி எல்லாம்பேசினான் என்று சொன்னால் போதும்' என்றார். சொல்லும் காலமாக மட்டுமல்ல, செயல்படும் காலமாக, திராவிட மாடல் ஆட்சி நடக்கும் காலமாக இது அமைந்துள்ளது அய்யா!

- ப.திரு­மா­வே­லன்.

Also Read: ”சமூகநீதி காவலராகத் திகழ்ந்தார் தந்தை பெரியார்” : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம்!