Tamilnadu

கலைஞர் கைவினை திட்டத்தை விமர்சிப்பது, மக்களை விமர்சிப்பதற்கு சமம்: அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் புதிய குடியிருப்பு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் சென்னை வால்டாக்ஸ் ரோடு தண்ணீர் தொட்டி தெருவில் அமைக்கப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகள் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை தங்கசாலை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்பு இடத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியதாவது, “வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் 700 குடியிருப்புகள் 130 கோடி ரூபாயிலும், தங்கசாலை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்ட வரும் 776 குடியிருப்புகள் 144 கோடி ரூபாயில் கட்டுவதற்கான பணிகளை கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த திட்டம் துவங்கும்போது ஆயிரம் கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம் என முதலமைச்சர் அறிவித்தார். கடந்த மார்ச் 14ஆம் தேதி தங்கசாலை தெருவில் 2097 கோடி ரூபாய் செலவில் 87 திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து 6309 கோடி ரூபாய் செலவில் 252 திட்டங்களாக இது விரிவடைந்தது.

கடந்த 4 ஆம் தேதி துவங்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்ய தினந்தோறும் சென்று கொண்டிருக்கிறோம். 252 திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும்” என்றார்.

=> ஃபெஞ்சல் புயலில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால் தான் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு...

“அவர் நின்று கொண்டிருக்கும் அரசியல் தளம் அப்படிப்பட்டது. அவர் குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவர் சொல்லும் குறைகளில் உண்மை இருந்தால், யார் குறைகளை சொல்கிறார்கள் என்பதை பாராமல் பாதிப்பு இருந்தால், எங்கெல்லாம் அபயக்குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆதரவுகரம் நீட்டுவார். ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் வஞ்சித்தாலும், பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரண நிதியை தடை இல்லாமல் வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கார்த்திகை தீபம் பொருத்தவரையில் யாரும் எதிர்பாராத வகையில் பெறும் மழை வெள்ளம் நிலச்சரிவு மண்சரிவு ஆகியவற்றைக் கடந்து, தமிழ் சான்றோர்களால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட தீபத் திருவிழா லட்சோபலட்ச பக்தர்கள் பங்குகொண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆட்சியில் எடுக்கின்ற நடவடிக்கைகள், முன்னெடுப்புகளுக்கு இறைவனும் இயற்கையும் முதல்வருக்கு துணையாக இருக்கிறது என்பதற்கு தீபத் திருவிழாவே சாட்சி.”

=> கோயிலை நிர்வாகம் செய்ய இந்து அறநிலைத்துறைக்கு தெரியவில்லை என எச் ராஜா பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது...

“அண்ணாமலை வந்துவிட்டதால் அவருக்கான கதாபாத்திரம் இருக்காது” என பதிலளித்தார்.

=> நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை CAG அமைப்புக்கு விவரங்களை கொடுக்காமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு...

“இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வால் உருவாக்கப்பட்ட சட்டம். மத்திய மாநில அரசுகள் உருவாக்கிய சட்டம் போன்று இந்த சட்டம் இல்லை. எனவே இந்த சட்டத்துக்கு உட்பட்டு தான் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும். அண்ணாமலை தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தகுந்த விளக்கங்கள் சொல்லும் வகையில் எங்கள் வாதங்கள் இருக்கும்” என பதிலளித்தார்.

=> விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து விட்டு கலைஞர் கைவினை திட்டத்தை கொண்டு வந்திருப்பது குறித்து அண்ணாமலை விமர்சித்தது குறித்து கேட்டபோது;

“அந்த திட்டம் வேண்டுமா? வேண்டாமா? அந்தத் திட்டத்தால் மக்களுக்கு பயனுள்ளதா? இல்லையா? திட்டம் யார் கொண்டு வந்தார்கள் என்பது முக்கியமில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு உண்டாகும் பயன்களை தான் மையப்படுத்த வேண்டுமே தவிர, திட்டத்தை குறை கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த திட்டத்தை குறை கூறுவது அந்த திட்டத்தால் பயன்பெறும் மக்களை குறை கூறுவதற்கு சமமாகும்” என்றார்.

Also Read: தொடர் கனமழை : தேனி மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !