Tamilnadu

அண்ணா அறிவாலயத்தில் War Room : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணி குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (War Room) நேரில் சென்று ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் செய்து தரப்பட்டுள்ள உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

     கனமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின்போது கழகத்தின் சார்பில் மக்களிடமிருந்து புகார்கள் பெற்றிடவும், அதற்கு கழக நிர்வாகிகளின் மூலம் தேவையான உதவிகள் செய்திடவும் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 

இந்த கட்டுபாட்டு அறையின் 08069446900 என்ற அவசர உதவி எண்ணிற்கு கனமழையால் பாதிக்கப்படும் மக்கள் அழைத்து தங்கள் குறைகளை தெரிவித்தவுடன், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கழக பகுதி செயலாளர்கள் போன்ற கழக நிர்வாகிகளுக்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்படும்.

உடன் கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு செய்து தருவர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புகார் தெரிவித்த நபருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தெரிவிப்பார்கள். 

கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், கட்டுப்பாட்டு அறைக்கு மாதவரத்திலிருந்து மழைநீர் தேங்கியுள்ளது குறித்து புகார் தெரிவித்த நபருடன் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் தொடர்பு கொண்டு, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டதா என்று கேட்ட போது, அதற்கு அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்து, முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

அடுத்ததாக, பெரம்பூலிருந்து மின்தடை குறித்து புகார் தெரிவித்த நபருடனும் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பேசிய போது, மின்தடை சீரமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை அரசு ஒருபுறம் எதிர்கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், உதவி தேவைப்படுவோர்க்கு முன்னணியில் நின்று உதவிட கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room-ஐப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

பெறப்படும் கோரிக்கைகளை, களத்தில் பணியாற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற - மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்களிடம் கொண்டு சென்று, உரிய உதவிகள் கிடைக்க ஒருங்கிணைக்கும் கழகத்தின் பணி தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 🔴LIVE : ஃபெஞ்சல் புயல் நிலவரம் - ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது!