Tamilnadu

தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை : தயார்நிலையில் 2229 நிவாரண மையங்கள்!

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது 30.11.2024 அன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (29.11.2024) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

இதுமட்டுமின்றி, இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

Also Read: வங்கக்கடலில் உருவாகிறது புயல்: நாளை கரையை கடக்கும் இடத்தை அறிவித்தது வானிலை ஆய்வு மையம்!